நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவினின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார்.
சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின் செல்வ கணேஷ், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சேர்ந்த பெண் சித்த மருத்துவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்தப் பெண்ணின் தம்பி சுா்ஜித் (24), கவினை வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், முதல் தகவல் அறிக்கையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரும் காவல் உதவி ஆய்வாளர்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரியின் பெயர்களும் சேர்க்கப்பட்டு அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆணவக் கொலை வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கவினின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் தனியார் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையைத் தொடங்கிவைக்க வந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், நெல்லையில் உள்ள கவினின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கவின் கொலை செய்யப்பட்டதற்கு அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.