விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் பெறும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.
சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் நேற்று இரவு தருமபுரியை வந்தடைந்தார்.
இதைத் தொடர்ந்து, நல்லம்பள்ளியை அடுத்த அதியமான்கோட்டையில் இருந்து தேவரசம்பட்டி, எர்ரப்பட்டி, ஒட்டப்பட்டி, பழைய குடியிருப்புப் பகுதி, அரசு கலைக் கல்லூரி வழியாக ‘ரோடு ஷோ’’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தருமபுரியில், அரசு விழா தொடங்கும் முன்பு, கூட்டுறவுத் துறை சார்பில், விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் பெறும் திட்டத்தை அதியமான் கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் தொடக்கி வைத்தார். தொடர்ந்து இ-சேவை மையத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சியில் அமைந்துள்ள பிஎம்பி கல்லூரி அருகில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, ரூ.512.52 கோடி மதிப்பில் 1,044 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.362.77 கோடியில் முடிவுற்ற 1,073 திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார்.
மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, நகராட்சிகள் துறை, மகளிர் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 830.06 கோடியில் 70,427 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி உரையாற்றினார்.