தண்டகாரண்யம் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து நீலம் புரடக்ஷன்ஸ் பதிவிட்டுள்ள கருத்து கவனம் ஈர்த்துள்ளது.
இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தண்டகாரண்யம் எனும் படத்தை இயக்கியுள்ளார்.
இதில் கெத்து தினேஷ், கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து நல்ல வரவேற்பை பெற்றது.
லப்பர் பந்து வெற்றிக்குப் பிறகு தினேஷின் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.
இந்தப் படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமெனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தண்டகாரண்யம் படத்தை தயாரித்துள்ள நீலம் புரடக்ஷன்ஸ் சமூக ஊடகத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, “அமரன்கள் செய்த அநீதிகளைப் பேசும் தண்டகாரண்யம்” எனப் பதிவிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தினை இயக்குநர் கோபி நயினார் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.