”என்னை துணை முதலமைச்சர் என்று முன்னிறுத்திய ஆதவ் அர்ஜுனா, என்னை ஏன் முதலமைச்சர் என்று கூறவில்லை.” என வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த தொல். திருமாவளவனிடம், ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்தபோது உங்களை முதலமைச்சராக்க ஆசைப்பட்டதாக கூறியிருந்தாரே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருமா, ”என்னை துணை முதலமைச்சர் என்றுதான் ஆதவ் அர்ஜுனா முன்னிறுத்தினார். முதலமைச்சர் என்று ஏன் கூறவில்லை?
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திருமாவளவன் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்து சுற்றுப்பயணம் மேற்கொள்வோம் என்று கூறினேன். கட்சிக்குள் இருந்து அதை செய்திருக்க வேண்டும் இல்லையா…?
ஆறு மாதம்தானே அவரை இடைநீக்கம் செய்தேன்... அதை ஏன் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை…? நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் நான் தலித்துகளுக்காகத்தான் நிற்பேன், என்னுடைய தலைவர் திருமாவளவன் தான், நான் அவருடைய சொல்லை மீறி நடந்து கொண்டதால், இடைநீக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்று கட்சிக்குள் இருந்திருக்க வேண்டும் இல்லையா....
அவர் முன்வைத்த கூட்டணி ஆட்சி கோரிக்கை சரி என்றாலும் துணை முதலமைச்சர் என்ற கோரிக்கை அர்த்தம் இல்லாத ஒன்று. திருமாவளவன் முதலமைச்சர் ஆவதற்குத் தகுதி இல்லாதவரா? உங்களின் செயல்திட்டங்களை என் மீது திணிக்காதீர்கள். என்ன முடிவு எடுக்க வேண்டும், என்ன கோரிக்கை வைக்க வேண்டும், கட்சியின் பலம் என்னவென்று எனக்குத் தெரியும்.
ஆதவ் அர்ஜுனா வைத்த கோரிக்கையே தவறானது. 2031இல் திருமாவளவன் முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறினால் எத்தனை பேர் வருவார்கள். அவர்களின் திட்டம் என்னவென்றால் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதுதான்.” என்றார் திருமாவளவன்.