தமிழில் பெயர்பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 50 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயரில் வைக்கும் நடைமுறையை முறையாக பின் பற்ற நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை அமைக்க தொழிலாளர் நலத்துறையிடம் பேசியிருப்பதாகவும், அது தொடர்பாக தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருவதாகவும் கூறினார். தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு 500 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக அபராதம் உயர்த்தப்பட்டிருப்பதாகவும், விரைவில் அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சாமிநாதன் பதில் அளித்தார்.