செய்திகள்

‘குற்றங்கள், கொலைகள் குறைந்துள்ளன’ – காவல் துறை வெளியிட்ட டேட்டா!

Staff Writer

“கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் தமிழகத்தில் நடப்பாண்டின் முதல் காலாண்டில் கொலைகள் குறைந்துள்ளது” என்று காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

“காவல் துறையினர் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, 2023ஆம் ஆண்டை விட 2024ஆம் ஆண்டில் தமிழகத்தில் கொலைகள், காயம்பட்ட வழக்குகள் மற்றும் கலவரங்கள் உள்ளிட்ட மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன.

மேலும், கொலை வழக்குகளின் நீண்டகால போக்கின் தரவுகளை பகுப்பாய்வு செய்ததில் 2017-2020 ஆம் ஆண்டில், கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து, 2019-ம் ஆண்டில் 1,745 வழக்குகளுடன் உச்சத்தை எட்டின. இருப்பினும், 2021 மற்றும் அதற்குப் பிறகு, கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து வருகின்றன. 2024-ம் ஆண்டில் மிக குறைந்த கொலை வழக்குகள் (1,563 வழக்குகள்) பதிவாகியுள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் மிக குறைந்த எண்ணிக்கையிலான கொலை வழக்குகள் 2024-ம் ஆண்டில் பதிவாகியுள்ளன.

ரவுடி கொலை வழக்குகள் குறைவு: கடந்த 4 ஆண்டுகளில், காவல்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், மிகக் குறைந்த அளவில் ரவுடி கொலைகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளில் 2024-ம் ஆண்டில் ரவுடி கொலைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன. 2025-ம் ஆண்டின் முதல் காலாண்டில் கொலை வழக்குகள் குறைவு. கொலை வழக்குகள் குறைந்து வரும் போக்கின் தொடர்ச்சியாக, 2025-ம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை), 340 கொலைகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டில் (2024) முதல் காலாண்டில் 352 கொலைகளாக இருந்தது.

ரவுடிகளின் செயல்பாடுகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: கொளைகளுக்கான காரணங்களில் திடீர் தூண்டுதல், குடும்ப தகராறுகள், திருமணத்தை தாண்டிய உறவு போன்ற பிற வகையான கொலைகளைத் தடுப்பது கடினம். கொலை வழக்குகளில் ரவுடி கொலைகளைக் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் கொலைகள் மற்றும் பிற வகையான மனித உடலுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பதில் நல்ல பலனைத் தந்துள்ளன. மேலும், 2024-ம் ஆண்டில் குண்டர் சட்டத்தின் கீழ் 3,645 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரவுடிகளை அவர்களின் தற்போதைய செயல்பாட்டின் அடிப்படையில் மறு வகைப்படுத்துதல், மறு வகைப்படுத்தலுக்குப் பிறகு ரவுடிகளின் எண்ணிக்கை ‘ஏ பிளஸ்’ - 421 பேர், ‘ஏ’ - 836 பேர், ‘பி’ - 6,398 பேர் மற்றும் ‘சி’ - 18,807 பேராக குறைந்துள்ளது. ‘ஏ பிளஸ்’ மற்றும் ‘ஏ’ பிரிவின் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துள்ளது. காவல்துறை மிக முக்கியமான மற்றும் தீவிர செயல்பாடுடைய ரவுடிகள் மீது கவனம் செலுத்தவும் அவர்களை திறம்பட கண்காணிக்கவும் இந்த எண்ணிக்கை குறைவு உதவியது.

தீவிர செயல்பாடுடைய ரவுடிகளையும் சிறப்பு கவனம் எடுத்து கண்காணித்து வருகிறோம். சிறைக்கு வெளியே மட்டும் அல்லாமல் சிறைக்குள் உள்ள ரவுடிகளின் நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இதற்கு முன்பு செய்யப்படாத ரவுடிகளுக்கு எதிரான நிதி (அசையும், அசையா சொத்துகள்) விசாரணை தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி ஆதாரத்தை தடுக்கும் வகையில், நிதி விசாரணையை நடத்துவதற்கான விரிவான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நிதி விசாரணையை நடத்துவதற்காக 41 தீவிர செயல்பாடுடைய ரவுடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ரவுடிகள் மற்றும் பிற சமூக விரோத சக்திகளுக்கு எதிரான இந்த முறையான, முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், தமிழகத்தில் பழிவாங்கும் மற்றும் ரவுடி கொலை வழக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து நல்ல பலனைத் தந்துள்ளன.” என்று அவர் கூறியுள்ளார்.