கோரிக்கை மனுவுடன் ஹூகாரா
கோரிக்கை மனுவுடன் ஹூகாரா  
செய்திகள்

கல்யாணத்துக்கு பெண் பார்த்துத் தரவும்! அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்த இளைஞர்!

Staff Writer

கண்டதும் காதல், அடுத்த நாள் டேட்டிங், அதற்கடுத்த நாள் திருமணம் என காலம் மாறிக் கொண்டு இருக்கையில், திருமணத்திற்கு பெண்ணே கிடைக்காமல் உருண்டு புரளும் இளைஞர்கள் இக்காலத்திலும் இருக்கவே செய்கிறார்கள்!

இதென்னடா புதுக் கதையாக இருக்கிறது என்று நினைக்கலாம்! நீங்கள் நம்பலன்னாலும் அதான் நெசம்!

கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் திருமணம் செய்துகொள்ள பெண்ணே கிடைக்காமல் தவியாய்த் தவிக்கின்றனர் 90-ஸ் கிட்ஸ்கள். கை நிறைய சம்பளம், திருமணம் வேண்டி பரிகாரம், பாத யாத்திரை என எது செய்தாலும் அவர்களுக்கு பெண் கிடைப்பது என்னவே குதிரை கொம்புதான்!

மண்டியாவில் விவசாய பட்டதாரிகளுக்கு பெண்கள் கிடைப்பதில்லை என்பதால், திருமணத்திற்குப் பெண் வேண்டி இளம் விவசாயிகள் மைசூருவில் இருந்து மாதேஸ்வரா கோவிலுக்கு நடைபயணமாக சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோல், கோலாரில் திருமணத்திற்குப் பெண் கிடைக்காத இளைஞர் ஒருவர், முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியிடம் தனக்கு வரன் தேடித் தரும்படி கோரிக்கை விடுத்த நிகழ்வும் நடந்தேறியது.

இதேபோன்று மற்றொரு சம்பவமும் சமீபத்தில் நடந்தேறியுள்ளது. கர்நாடகாவின் தம்பல் கிராமத்தை சேர்ந்தவர் முத்து ஹுகாரா (வயது 28). சொந்தமாக வியாபாரம் செய்து வரும் இவர், மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கிறார். இவருக்குப் பெண் பார்க்கும் படலம் இரண்டு வருடங்களாக நடந்து வந்தாலும், பெண் கிடைக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த ஹூகாரா செய்த காரியம்தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அவர் நேரடியாக தங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சென்று அரசு சார்பில் தனக்கு பெண் பார்த்து தரும்படி மனுக் கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்த மனுவில், திருமணம் செய்துகொள்ள பெண் பார்த்து வந்ததாகவும், மாதம் ரூ. 50 ஆயிரம் சம்பாதித்தும் பெண் கிடைக்கவில்லை என புலம்பி தள்ளியிருக்கிறார். அதேபோல், தனக்கு சகோதரி, சகோதரர்கள் இல்லை என்பதால், தன்னால் வரன் தேடி அலைய முடியவில்லை என்றும் வேதனைப்பட்டிருக்கிறார். தனக்கு கர்நாடக அரசு நான் திருமணம் செய்துகொள்ள பெண் பார்த்து தரும்படியும், எந்த சாதியை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் திருமணம் செய்துகொள்வதாகவும் ஹூகாரா கோரிக்கை வைத்துள்ளார்.

அதிகாரிகளிடம் எதெதுக்கெல்லாமோ மனு கொடுத்த காலம் போய், திருமணத்துக்கு பெண் பார்த்துக் கொடுக்கும் படி கேட்கும் காலத்துக்கு வந்திருப்பதை என்னவென்று செல்வது?

ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் அரசியல் கட்சிகள், திருமணமாகாத இளைஞர்களுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கப்படும் என்று எதிர்காலத்தில் தேர்தல் வாக்குறுதி கொடுத்தாலும் கொடுக்கலாம்! அரசியல் கட்சிகளே...நோட் பண்ணுங்கப்பா!