சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க ஒன்றிணைந்த அதிமுக உருவாக வாய்ப்பு இருப்பதாக நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“ஆட்சி மாற்றம் வர வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அதற்கேற்ற வியூகத்தை வகுத்துத்தான் ஆக வேண்டும். அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், அமமுக என எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து வர வேண்டும். இந்த வியூகத்தில் நாதக, தவெகவும் கூட இணைய வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
கடைசி நேரத்தில் எந்த குழப்பமும் வரக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமி இப்போதே தெளிவாக பேசிவிட்டார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இல்லை. அதிமுக தலைமையிலான கூட்டணிதான். பாஜக இதிலொரு அங்கம். இதை மத்தியில் இருப்பவர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இது மத்தியப் பிரதேசமோ, மகாராஷ்டிரமோ இல்லை தமிழ்நாடு. இங்கு இரட்டை இலையின் கீழ் மற்ற கட்சிகள் செயல்படுவதுதான் சரி.
அதிமுகவுக்கு திமுகதான் நேர் எதிரான கட்சி. ஆட்சிக்கு யார் இருக்கக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். யார் எதிரி என்பதில் இப்போது குழப்பம் இல்லை. திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்கள் ஒன்றாக இணைந்து போட்டிப்போட்டால் போதும். தேர்தல் நெருங்க நெருங்க ஒன்றிணைந்த அதிமுக உருவாக வாய்ப்பு உள்ளது. அவர்கள் வேற வேற இல்லை. ஜெயலலிதாவின் அதிமுகவை முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்கள். அவர்கள் ஒற்றுமையாக இருப்பது நல்லதுதான்.” என்றார்.