விசிக தலைவர் திருமாவின் சிற்றன்னை செல்லம்மாள் காலமானார். 
செய்திகள்

‘இரட்டை சடை பின்னிவிட்டுப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய்...’ - திருமா பிறந்த நாளில் துயரம்!

Staff Writer

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது சிற்றன்னை செல்லம்மாள் காலமானார்.

தொல்.திருமாவளவனின் 63ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில், “மதச்சார்பின்மை காப்போம்” என்ற தலைப்பில் இசையரங்கம் , கவியரங்கம், வாழ்த்தரங்கம் உள்ளிட்டவை நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருமாவளவன் பிறந்த நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிறந்த நாளில் துயரம்

இந்நிலையில் திருமாவளவன் தமது சமூக ஊடகப்பக்கத்தில் , ” எனது சிற்றன்னை செல்லம்மாள் (78)அவர்கள் சற்றுமுன் இயற்கை எய்தினார். கடந்த ஆக 07 அன்று மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்த நிலையில் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மிகுந்த கவனத்தோடு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளித்தனர். எனினும், பலனின்றி தற்போது காலமானார் என்பது பெருந்துயரமளிக்கிறது.

பள்ளிப் பருவத்தில் எனக்கு ஆடை உடுத்தி, தலையில் எண்ணெய்த் தடவி இரட்டை சடைபின்னிவிட்டுப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய்! தந்தை என்னைக் கண்டிக்கும் போதெல்லாம் எனக்காக வாதாடிய தாய்! வீட்டில் மூத்த மகன் என்பதால் ‘பெரியதம்பி, பெரியதம்பி’ என்று என்னைச் செல்லமாக அழைத்த தாய்! நான் பட்டவகுப்பை முடித்த காலத்திலிருந்து, ‘படித்தது போதும் கல்யாணம் பண்ணு பா’ என அறிவுறுத்திய தாய்! பத்தாண்டுகளுக்கு முன்னரே பக்கவாதத்தால் உடல் நலிவுற்று நினைவு தடுமாறி வீட்டிலேயே முடங்கிய நிலையிலும் எப்போதாவது நான் ஊருக்குச் செல்லும்போது, என் குரல் கேட்டதும் ‘தம்பீ தம்பீ’ என்று ஓடிவந்து என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு அன்பைப் பொழிந்த தாய்! இன்று எம்மோடு இல்லை என்பது வாழ்வே வெறுமையாய் உள்ளது. துக்கத்தால் மனம் கனக்கிறது.

அப்பா(2010), அக்கா,(2020), சின்னம்மா (2025)என அடுத்தடுத்து இழப்புகளை எதிர்கொள்ளும் அவலம். துயரங்களைத் தாங்கும் நிலை. அம்மாவுக்கு எனது வீரவணக்கம்!” என பதிவிட்டுள்ளார்.