பெரியார் சர்ச்சை- சீமானுக்கு திருமுருகன் காந்தி 
செய்திகள்

புலிகளுக்கு எதிராக சீமான் - திருமுருகன் காந்தி அதிரடிச் சவால்!

Staff Writer

தந்தை பெரியாரைப் பற்றி நா.த.க.தலைவர் சீமான் அவதூறாகப் பேசினார் என பல்வேறு சமூகநீதி அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பெரியார் பற்றி விவாதிக்க சீமானுக்கு சவால் விடுத்துள்ளார். 

சத்யம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், அவர் இதைத் தெரிவித்துள்ளார். 

“தாயுடனும் மகளுடனும் உறவுகொள்ளலாம் என சீமான் கூறுவதைப் போல தந்தை பெரியார் சொல்லவில்லை. இதற்கு எந்த ஆதாரத்தையும் சீமான் தரவில்லை. ஒருவேளை இது சீமானின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். அதை தந்தை பெரியாரின் பெயரில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வளவுதான்.” என்று திருமுருகன் கூறியுள்ளார். 

சீமான் தன்னுடைய விருப்பத்தை இன்று உயிரோடு இல்லாத தந்தை பெரியார் மீதான அவதூறாக வெளிப்படுத்துகிறார்; சீமான் மீதான பெண்களின் குற்றச்சாட்டுகள் எல்லாரும் அறிந்த ஒன்றுதான் என்றும் திருமுருகன் காந்தி காட்டமாகக் கூறினார். 

குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை பெரியாரிய இயக்கம்தான் காட்டவேண்டும் என சீமான் சொல்லியுள்ளாரே என செய்தியாளர் கேட்டதற்கு, “ பெரியார் நடத்திய குடியரசு இதழ்கள் முழுவதும் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் அதை எடுத்துப் பார்க்கலாம். இதில் தடை ஒன்றுமில்லை.” என்று திருமுருகன் காந்தி பதிலளித்துள்ளார். 

மேலும், பெரியார் பற்றிய சந்தேகங்களை எடுத்துக்கொண்டு வந்தால் தாங்கள் அதற்கு பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், விடுதலைப்புலிகளுக்கு எதிராக, ஈழத்துக்கு எதிராக சீமான் செயல்பட்டதைச் சொல்லவும் உள்ளதாக அவர் கூறினார்.