”திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம்” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். தொண்டர்களை காவல்துறை அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது:
தமிழ் மிக தொன்மையான மொழி என பிரதமர் மோடி உலக அரங்கில் சொல்லி கொண்டு இருக்கிறார். ஐ.நா. சபையில் தமிழ் மொழியை பிரதமர் போற்றினார். தமிழ் மொழிக்கு மரியாதை அளிக்கும் வகையில் 3 ஆண்டுகளாக காசி தமிழ் சங்கமம் நடந்து கொண்டு இருக்கிறது. தமிழ் மொழிக்கு பா.ஜ.க. அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரசும், தி.மு.க,வும் நடத்த விடாமல் தடுத்தனர்.
பிரதமர் மோடி தலையிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் கொண்டு வந்தார். தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.11 லட்சம் கோடி கொடுத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானுக்கே சொந்தமானது என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. சிக்கந்தர் மலை என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர்.
முருக வழிபாடு செய்கின்ற இடங்களில் சிலர் விரும்பத்தகாத செயல்களை செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1931இல் ப்ரிவியூ கவுன்சில் நீதிமன்றத்தில், 33 செண்ட் தவிர ஒட்டுமொத்த மலையும் முருகனுக்கே சொந்தம் என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 1983இல் வருவாய் துறை ஆவணத்தில், இந்த மலையை சிக்கந்தர் மலை என திடீரென குறிப்பிட்டுள்ளனர். வருவாய் துறை ஆவணங்களில் திருப்பரங்குன்றம் மலை என்றே இருக்க வேண்டும். ஆனால் ஆவணத்தில் அப்படி இல்லை.
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என தமிழக அரசு மாற்றி உள்ளது. மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து அறநிலையத்துறை உடனடியாக முன்வர வேண்டும். திருப்பரங்குன்றம் சைவத் திருத்தலம். வைணவ, சைவ தலத்தில் பலியிடும் வழக்கம் கிடையாது.” என்றார்.