திருபுவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்தது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், சீமான், புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருபுவனம் அருகே அமைந்துள்ள மடப்புரம் காளி கோயிலில் தற்காலிக காவலராக பணிபுரிந்த அஜித், காவல் துறை விசாரணையில் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் கட்சியினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவல் துறையை நிர்வகிக்கத் தெரியவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி - அதிமுக
"ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது" என சினிமா ரிவீவ் எழுதிய திமுக அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்?. விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?
தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது. தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
நயினார் நாகேந்திரன் - பாஜக
மடப்புரம் பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமாரை விசாரணை எனும் போர்வையில் அழைத்துச் சென்று, 7 போலீசார் இணைந்து 2 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இது லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது.
தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாலே ஏழை, எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. போலீசாரின் அராஜகப் போக்கிற்கு மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், சட்டம் ஒழுங்கை தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், உடனடியாக இவ்விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி, உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும்.
அன்புமணி - பாமக
தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலைகள் எவ்வாறு நடந்தனவோ, அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் அஜித்குமார் கொல்லப்பட்டுள்ளார். இதற்காக தமிழக காவல்துறையும், அதற்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் தலைகுனிய வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் படுதோல்வி அடைந்து விட்ட காவல்துறை அப்பாவிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 28 பேர் காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல்கள் இருக்க முடியாது.
சீமான் - நாதக
திருட்டு புகாருக்காக அஜிதைக் கடுமையாகத் தாக்கி விசாரித்த தமிழ்நாடு போலீசார், அஜித் மரணத்திற்குக் காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதியாதது ஏன்? அவர்களைக் கைது செய்து உரிய விசாரணை நடத்தாதது ஏன்? திமுக ஆட்சியில் பாமர மக்களுக்கு ஒரு நீதி? அதிகாரம் படைத்தவர்களுக்கு வேறு நீதியா? இதுதான் திராவிட மாடல் கட்டிக்காக்கும் சமூக நீதியா?
திமுக ஆட்சியில் போலீஸ் விசாரணையின்போது குரலற்ற எளிய மக்கள் கொல்லப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது கொடுங்கோன்மையின் உச்சமாகும். கடந்த 4 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்டவிசாரணை மரணங்கள் நடைபெற்றுள்ள நிலையில் அம்மரணங்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைத்தப்பாடில்லை
முதல்வர் ஸ்டாலின் போலீஸ் ஸ்டேசன் மரணங்களைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுபோல் வெளியிட்ட அறிவிப்புகள் யாவும், வழக்கம்போல் வெற்று விளம்பர அரசியல் நாடகம் மட்டும்தான் என்பதை, அஜித் அவர்களின் படுகொலை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனந்த் - தவெக
திமுக ஆட்சியில், காவல் துறையின் கட்டுப்பாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர் உயிரிழப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே பல சம்பவங்கள், இதற்கு உதாரணமாக உள்ளன. மேலும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கு, கனகம்மாசத்திரம் கர்ப்பிணிப் பெண்ணைக் காவலர் காலால் உதைத்த சம்பவம், தவெக தலைவரின் உருவம் பதித்த கைக்குட்டையை வைத்திருந்த கல்லூரி மாணவர் மீது விசாரணை என இந்த ஆட்சியில் காவல் துறையின் அராஜகப் போக்கைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டுப் புகார் அளிக்க வருவோர் மீதே காவல் துறை வழக்குப் பதிவு செய்த வரலாறும் இந்த அவல ஆட்சியின் அடையாளமாக இருக்கிறது.
காவல்துறையின் போக்கைக் கவனித்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது காவல் துறையின் ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு மாதிரியும், ஆளும் கட்சியாக மாறிய பின் ஒரு மாதிரியும் பேசுவது என்பது. தற்போதைய ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை.
எதிர்க்கட்சியாக இருந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் வாய்கிழிய வீர வசனம் பேசிய முதல்வர், அவரது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த காவல் நிலைய மரணங்களுக்கு இதுவரை வாய் திறக்கவில்லையே, ஏன்?
விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர் காவல்துறையால் உரிய சட்ட விதிமுறைகளின்படிதான் விசாரிக்கப்பட வேண்டுமே தவிர, அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து அராஜகத்தில் ஈடுபடக் கூடாது. ஆனால் மக்கள் விரோத திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் காவல்நிலைய மரணங்களைப் பார்க்கும் போது, எங்கள் தலைவர் ஏற்கெனவே கூறியது போல் அதிகாரத் திமிர் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே இதற்கெல்லாம் காரணம் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
இனி வரும் காலங்களில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழாதவண்ணம், காவல் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.