நிகிதாவுக்கு தொழிலே ஏமாற்றுவதுதான் என்றும் தனக்கு முன்னர் 3பேருடன் அவருக்கு திருமணம் நடந்துள்ளதாக தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் கூறியுள்ளார்.
காவலாளி அஜித்குமாரை தாக்கியது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று திருமாறன் கூறினார்.
போலீசார் அடித்துக்கொன்ற திருப்புவனம் காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு வெளியே வந்த தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”21 ஆண்டுகளுக்கு முன்பே நிகிதாவை எனக்கு தெரியும். நிகிதா 4 திருமணங்களை செய்து யாருடனும் வாழவில்லை. எனக்கும், நிகிதாவுக்கும் திருமணம் நடந்தது உண்மை. ஆனால், அன்றைய இரவு பால் பழம் சாப்பிட சென்றபோது அவர் சென்றுவிட்டார். மறுநாள் நாங்கள் அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது, தகராறு நடந்தது. எனக்கு முன்னால் 3 பேருடன் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த நிகிதாதான் என எனக்கு தெரிந்திருந்தால், நான் முதலிலேயே வந்திருப்பேன்.
திருமணம் முடிந்தபின்னர் மாப்பிள்ளையின் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு கொடுப்பதை வேலையாக நிகிதா குடும்பத்தினர் வைத்திருந்தனர். திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளையின் குடும்பத்தையே சித்ரவதை செய்வார்கள். இதில் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வரதட்சணை வழக்கு பதிவு செய்ய வைத்து, மிரட்டி பணம் பறிப்பதுதான் அவர்களின் வேலை. அதுபோல், வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.
அஜித்குமாரை அழைத்து விசாரித்தபோது, அவர் மீது இதற்கு முன்பு வழக்கு இருக்கிறதா என்பதை அறிந்திருக்க வேண்டும். மேலும் புகார் அளித்தவர் யார் என்பதையும் விசாரித்திருக்க வேண்டும். நிகிதா பல மோசடிகளில் ஈடுபட்டவர். அதுபற்றி ஆய்வு செய்யாமல், அஜித்குமாரை தாக்கியது தண்டனைக்குரிய குற்றமாகும்.
வழக்குகளில் அதிகாரிகளை வைத்து அவர் கொடுக்கும் அழுத்தம் அன்றைய காலகட்டத்திலும் இருந்தது. மாப்பிள்ளை வீட்டில் திருமணத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்வார்கள். ஆனால், நிகிதாவின் குடும்பத்தில் 10 பேருக்கு மேல் வரமாட்டார்கள். நிச்சயம் செய்வார்கள். 15 நாளில் அவசர அவசரமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து திருமணத்தை முடிப்பார்கள்.
அஜித்குமாருடன் ஏற்பட்ட ஈகோ பிரச்சினையில்தான் அவரை நிகிதா சிக்க வைத்திருக்கிறார். அந்த பெண்ணின் தந்தை சப்-கலெக்டர், தாயார் அரசு ஊழியர். தனது ஊரில் உள்ள பல பேரை ஏமாற்றி இருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் சூப்பிரண்டாகவும், துணை சூப்பிரண்டாகவும் இருந்தவர்கள் அந்த குடும்பத்தினருக்கு உடந்தையாக இருந்தனர். பாதிக்கப்பட்ட அஜித்குமார் வழக்கில் நிகிதா, அவரது தாயார் சிவகாமி ஆகியோரை சேர்க்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.