முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
செய்திகள்

'இது ஒரு கருப்பு நாள்'- பதவி நீக்க மசோதாவிற்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!

Staff Writer

முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இது ஒரு கருப்பு நாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இந்த மசோதா குறித்து கூறியிருப்பதாவது: “ஜனநாயகத்தின் ஆணிவேரையே தாக்கி, இந்தியாவை சர்வாதிகாரத்தில் மூழ்கடிக்க மசோதா முயற்சிக்கிறது. நாட்டை சர்வாதிகாரத்தின் பிடியில் தள்ளும் நோக்கத்தில் மத்திய அரசு ஜனநாயகத்தின் அடித்தளங்களை தகர்க்கிறது. வாக்கு திருட்டு அம்பலமாகியுள்ள நிலையில் பாஜக அரசு அமர்ந்து இருப்பதே கேள்விக்குறியாகிவிட்டது. மத்தியிலமைந்துள்ள பாஜக அரசு சட்டபூர்வமானதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அம்பலமான வாக்கு திருட்டு மோசடிகளில் இருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்ப முயற்சி நடைபெறுகிறது.

அரசியலமைப்புக்கு விரோதமான இந்த மசோதாவை நீதிமன்றங்கள் நிச்சயமாக நிராகரிக்கும். இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பதவி நீக்கம் செய்தல், விசாரணை இல்லை, தண்டனை இல்லை என்பது பாஜகவின் உத்தரவு. இது சீர்திருத்தம் இல்லை. கருப்பு மசோதா. கருப்பு நாள். ஜனநாயகத்தின் அடிவேரையே தாக்கும் மசோதாவை நான் கடுமையாக கண்டிக்கிறேன். வாக்குகளை திருடுதல், மாநிலங்களை நசுக்குதல் என சர்வாதிகாரம் இப்படித்தான் தொடங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.