“மக்கள் நல திட்டங்களால்தான் நாங்கள் திமுக ஆட்சியை ஆதரிக்கிறோம்” என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “திமுக ஆட்சியின் மக்கள் நல திட்டங்களை நாங்கள் வரவேற்று ஆதரித்தோம். மக்களுக்கு எதிரான திட்டங்களையும், சட்டங்களையும் கொண்டு வந்த போது எதிர்த்திருக்கிறோம். எனவே, இப்போதுதான் நாங்கள் புதிதாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம், அதனால் தான் பாலகிருஷ்ணனை மாற்றிவிட்டார்கள் என்பதிலெல்லாம் துளியும் உண்மை கிடையாது.
திமுக-வை நாங்கள் சார்ந்திருப்பதற்கு முக்கியமான காரணம், மத்தியில் ஆளும் பாஜக-வால் வகுப்புவாத, சாதி வெறி, மத வெறி போன்ற நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், இன்றைக்கு பாஜக-வை தீவிரமாக எதிர்க்கும் உறுதியான சக்தியாக தமிழகத்தில் இருப்பது திமுக தான். ஆகவே, பாஜக-வை எதிர்க்கும் போராட்டத்தில் திமுக-வுடன் சிபிஎம் தொடர்ந்து பயணிக்கும்.” என்று கூறியுள்ளார்.