தலைமைச் செயலகம் 
செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் தாமதமாகும்! – என்ன காரணம்?  

Staff Writer

அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் ஏப்ரல் 2ஆம் தேதி வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை கடைசி தேதியில் விடுவித்து விடுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மாதமும் 30 அல்லது 31ஆம் தேதி ஊழியர்களின் வங்கிக் கணக்கில் சம்பளப் பணம் வரவு வைக்கப்படும். ஒருவேளை கடைசி நாள் விடுமுறை நாளாக இருந்தால் அதற்கு முந்தைய நாள் சம்பளம் வரவு வைக்கப்படும்.

இந்த நிலையில் நடப்பு மார்ச் மாதத்திற்கான சம்பளம், வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக இந்த மாத இறுதியில் வரவு வைக்கப்படாது என்றும் இரண்டு நாள் தாமதமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 லட்சம் அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள் மற்றும் 7.05 லட்சம் ஓய்வூதியர்கள்/குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இந்த ஆண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் 02.04.2025 அன்று வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.