அரசுப் பேருந்து ஊழியர் 
செய்திகள்

அரசுப் பேருந்துகளுக்கு ஓட்டுநர் கம் நடத்துநர் வேலையா?- 30 ஆயிரம் இடங்கள் காலி!

Staff Writer

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணிக்காக 3,274 நேரடி வேலைவாய்ப்பு வழங்க விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 24 வயது முதல் 40 வரை உள்ள இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை வரவேற்கிறோம். இன்னும் 27 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனம்-ஏஐடியுசி தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் இதுகுறித்து வெளியான அறிக்கையில், விரைவில் காலியிடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். 

”அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,232 பேருந்துகளைப் பராமரிப்பதற்கு தொழில்நுட்பப் பணியாளர்களும், இவர்களை மேற்பார்வை செய்வதற்கான பணியாளர்களும், நிர்வாக அலுவல்களைச் செய்வதற்குரிய நிர்வாகப் பணியாளர்களும் இருந்தால்தான் போக்குவரத்துக் கழகங்கள் நல்ல முறையில் செயல்படமுடியும்.

ஒரு பேருந்தை இயக்குவதற்கு 7.5 பணியாளர் வீதம் தேவை என்பதை 1976ஆம் ஆண்டில் பட்டாபிராமன் கமிட்டி, அரசுக்குப் பரிந்துரை செய்தது. 1998ஆம் ஆண்டிற்குப்பின் விடுப்பு வசதிகள் மாற்றப்பட்ட பின் 2010இல் தில்லைநாயகம் கமிட்டி ஒரு பேருந்தை இயக்குவதற்கு 11 நபர்கள் தேவை என பரிந்துரைத்தது.

1990 முதல் 2018 வரை வெளியான அரசாணைகள், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்பாக வெளியிடப்பட்டுள்ள 2021 முதல் 2025வரை வெளியான நான்கு அரசாணைகள் அனைத்திலும் இருக்கின்ற பணியாளர்களை வைத்து பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் ஓய்வுபெற்று சென்ற பணியாளர்களின் காலிப் பணியிடங்கள் சுமார் 30,000 நிரப்பப்படாமல் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன.” என்று அவர் கூறியுள்ளார். 

”22 ஆயிரம் பேருந்துகள் நாளொன்றிற்கு 95 லட்சம் கிலோமீட்டர் தொலைவு இயக்கி 2.25 கோடி பயணிகளுக்கு சேவையாற்றி வந்தன. 2020, 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக பேருந்து எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக எண்ணிக்கை அதிகரித்து 2024 மார்ச் மாத நிலவரப்படி18,728 பேருந்து கள் 79 லட்சம் கி. மீ. இயக்கி நாளொன்றிற்கு 1.76 கோடி பேர் பேருந்து சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் விடியல் பயணம் மூலம் 50 இலட்சம் மகளிர் இலவச பேருந்து சேவையை பயன்படுத்துகின்றனர்.

பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் ஓட்டுநர் - நடத்துநர் அல்லது ஓட்டுநர் உடன் நடத்துநர் பணிகளுக்கு மட்டுமே தேவையைவிடக் குறைவான எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு நியமனம் எதுவும் செய்யப்படவில்லை.

ஒப்பந்த முறையில் தேவையான பணியாளர்கள் பணிசெய்ய முன்வராத நிலையில் அரசு மாற்று ஏற்பாட்டிற்கு சென்றுள்ளது. அந்தத் தொழிலாளர்களை நிர்வாகம் கட்டுப்படுத்தவும் இயலவில்லை.

தற்போது போக்குவரத்துத் துறைச் செயலாளர் அரசாணை 31 நாள் 21.02.2025-ன் மூலம் பொதுத்துறை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனம் செய்வதற்கான பொதுப்பணி விதிகளில் திருத்தத்தைக் கொண்டுவந்து ஓட்டுநர், நடத்துநர் தனித்தனியாக நியமனம் செய்யப்படாமல் கல்வி, உடல் தகுதியின் அடிப்படையில் ஓட்டுநருடன் நடத்துநர் பணி நியமனம் செய்வதன் மூலம் தேவைக்கேற்ப ஓட்டுநர் அல்லது நடத்துநராகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளார். ஓட்டுநருடன் நடத்துநர் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஓட்டுநர் அறிவுரையாளர்- பயணச்சீட்டு ஆய்வாளர் பதவி உயர்வும் வழங்குவதற்கு பொது சேவை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் மூலமாக எட்டு போக்குவரத்து கழகங் களுக்கும் ஓட்டுநர் உடன் நடத்துநர் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி, உடல் தகுதியைப் பொறுத்தவரை 160 செ.மீ. உயரம், 50 கி.கி. உடலின் எடை, குறைபாடு இல்லாத கண் பார்வை, முதலுதவிச் சான்று, 18 மாத காலமாக கனரக வாகனத்தை இயக்கி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நேரடி நியமனம் 21.04.2025 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பேருந்துக்கு ஒரு தொழில்நுட்ப பணியாளர் வீதம் 18,728 நபர்கள் தேவை. ஆனால் 12,464 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். அலுவலக பணிகளை மேற்கொள்ள 15,000 பணியாளர்கள் தேவை. ஆனால் 5,000 -க்கும் குறைவான பணியாளர்களே உள்ளனர். 18,728 பேருந்துகளை இயக்குவதற்கு ஓட்டுநர் நடத்துநர் மட்டுமல்லாது தொழில்நுட்பம், அலுவலகம், மேற்பார்வையாளர்கள், அலுவலர்கள் குறைந்தபட்சம் ஒரு பேருந்திற்கு 7.5 நபர்கள் என்ற பணியாளர் விகிதத்தில் 1,40,460 பணியாளர்கள் தேவை. ஆனால் 1,08,318 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். 32,000 காலிப் பணியிடங்கள் உள்ளன.

நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளுக்கு ஓட்டுநருடன் நடத்துனர் பயன்படுத்தினால் ஒரு நடத்துநர் பயணிகளுக்கு பயணச்சீட்டை வழங்கிவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். பயணிகள் ஏறும் இடங்களில் எல்லாம் நடத்துநர் அவருக்குரிய பணியைச் செய்ய வேண்டும். முழுமையான ஓய்வு இல்லாதநிலையில் மீண்டும் அவர் பேருந்தை இயக்குவதற்குத் தயாராக வேண்டும். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களில் இதுதான் தற்போது நடைமுறையில் உள்ளது. பேருந்து கூட்டம் குறைவாக உள்ள நிலையில் பயணிகளை ஏற்றுவதற்காக நடத்துநராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓட்டுநர் விழிப்புடன் இருக்கவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.

பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். பணியாளர்களும் பயணிகளும் மனித உயிர்கள் என்பதை மறந்துவிட்டு மனிதனை இயந்திரமாக நினைத்து ஆபத்தான பணிச் சூழலை உருவாக்கி வேலைவாங்குவதும், உழைப்பைச் சுரண்டுவதும் மனிதாபிமானமற்ற செயலாகும்.

உயர் மட்டத்தில் உள்ள அலுவலர்களைப் பணி தேவைப்படும் இடங்களில் கேட்டகரி மாற்றி வேலைசெய்வதற்குரிய அனைத்து பணிகளிலும் வேலை வாங்கமுடியுமா? அவரவர் பணியை அவரவர் செய்தால்தான் பணியாளரிடமிருந்து முழுமையான திறனை எதிர்பார்க்க முடியும்.

தமிழ்நாட்டில் தற்போது இயக்கப்பட்டுவரும் நகரம், புறநகர் பேருந்துகளில் நடைமுறைக்கு ஒவ்வாத ஓட்டுநருடன் நடத்துநர் பணி நியமனங்களைச் செய்து தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதுதான் இதில் உள்ள சிந்தனையாகும்.

எனவே தமிழக அரசு ஓட்டுநருடன் நடத்துநர் பணி நியமனம் செய்வதைக் கைவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஓட்டுநர், நடத்துநர் தனித்தனியாகவும் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.” என்று ஏஐடியுசி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.