இந்தியாவிடம் அளவுக்கு அதிகமான பணம் உள்ளபோது, ஏன் 21 மில்லியன் டாலர்களை அவர்களுக்கு வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள வீடியோவில் அதிபர் டிரம்ப் பேசியுள்ளதாவது,
''இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை ((ரூபாய் மதிப்பில் 1.82 லட்சம் கோடி) வழங்க வேண்டும்? அவர்களிடம் அதிக எண்ணிக்கையில் பணம் உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரையில் உலக நாடுகளில் அதிகம் வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. இந்தியப் பொருளாதாரமும் குறிப்பிடத்தகுந்த அளவிலேயே உள்ளது. அங்கு நமக்கான வரி அதிகம் உள்ளதால், நாம் அங்கு செல்வது அரிதானது.
பிரதமர் நரேந்திர மோடி மீது நான் மிகுந்த மரியாதை கொண்டுள்ளேன். ஆனால், வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க நாம் ஏன் 21 மில்லியன் டாலரை வழங்க வேண்டும்?'' என ட்ரம்ப் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதைத் தொடர்ந்து, அரசின் செயல்திறன் துறைக்கான தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்கை நியமித்தார்.
அரசு நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் வீணான செலவினங்களைக் கட்டுப்படுத்துவது இந்தத் துறையின் முக்கிய நோக்கமாகும்.
இதனிடையே எலான் மஸ்க் தலைமையிலான இத்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வெளிநாடுகளுக்கு அளித்து வரும் நிதி உதவியை குறைத்ததும், ரத்து செய்தும் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இதில் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்க இருந்த 21 மில்லியன் டாலரை ரத்து செய்துள்ளது.