பேராசிரியர் உதயகுமார் 
செய்திகள்

ரூபாய் குறியீடு நீக்கம்... வடிவமைத்த தமிழரின் கருத்து என்ன?

Staff Writer

தமிழ் நாடு அரசின் பட்ஜெட் அறிக்கையில் ரூபாய் குறியீடு (₹) நீக்கப்பட்டிருப்பது அகில இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரூபாய் குறியீட்டை வடிவமைத்த பேராசிரியர் உதயகுமார் இது பற்றிக் கூறுகையில்,’ இது மாநில அரசின் விருப்பம்’ என்று கூறினார்.

தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில், மத்திய அரசின் ரூபாய் குறியீட்டை மாற்றி, ‘ரூ’ என்ற தமிழ் எழுத்துடன் கூடிய இலச்சினையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற வாசகத்துடன் ‘சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட’ என குறிப்பிட்டு, ரூபாய் குறியீடுக்கு பதிலாக ‘ரூ’ என்ற இலச்சினையை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டார்.

இந்திய ரூபாய்க்கென தனிக்குறியீடு கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதை வடிவமைத்தவர் தமிழரான உதயகுமார் ஆவார். இவர், ரிஷிவந்தியம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கத்தின் மகன் ஆவார். இவர் தற்போது கவுகாத்தி ஐஐடியில் பேராசியராக பணியாற்றி வருகிறார்.

அவர் வடிவமைத்த ரூபாய் குறியீடு, இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இதுவரை பட்ஜெட்டில் அந்த குறியீடே பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு கூட தமிழக பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் குறியீடு இடம்பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு பட்ஜெட் இலச்சினை ‘ரூ’ என மாற்றப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது.

இது தொடர்பாக ரூபாய் குறியீட்டை வடிவமைத்த பேராசியர் உதயகுமார் கூறியதாவது: ”எனக்கு இதில் முரண்பாடு இல்லை. மாற்றம் தேவை என்று மாநில அரசு உணர்ந்திருக்கலாம். அவர்கள் சொந்த திட்டத்தை செயல்படுத்த விரும்பியுள்ளனர். இது முழுக்க முழுக்க மாநில அரசாங்கத்தின் விருப்பம். நான் இதைப் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை.” என்றார்.