செய்திகள்

உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா. தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு!

Staff Writer

உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.

193 நாடுகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்திய உள்பட 65 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. கடந்த முறை ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது 140-க்கு அதிகமான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த நிலையில் தற்போது வெறும் 93 நாடுகளே ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்துள்ளன.

உக்ரைன் - ரஷ்யா இடையே தொடங்கிய போர் மூன்றாண்டுகள் கடந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆர்வம் காட்டிவருகிறார். அதன் நிமித்தமாக அவர் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தையும் மேற்கொண்டார். போரை முடிவுக்குக் கொண்டுவர புதினும் - ஜெலன்ஸ்கியும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதேவேளையில் ஜெலன்ஸ்கியை கடுமையாக சாடியும் வருகிறார். இதுவரை அமெரிக்கா அள்ளிக் கொடுத்த ஆயுத, நிதியுதவிகளுக்காக உக்ரைனில் உள்ள அரிய தாதுக்களை அணுக அமெரிக்காவுக்கு அனுமதியும் கோரி வருகிறார்.

இந்நிலையில் தான் ஐ.நா.வில் உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகளை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றத்தைக் குறைக்கவும், போரை அமைதியான முறையில் தீர்க்கவும் வலியுறுத்தி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சூழலில் ஐரோப்பிய நாடுகள் பல அவசர மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளன. பெல்ஜியம் தலைநகர் ப்ரசல்ஸில், 27 ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பங்கேற்கும் அவசர மாநாட்டை, மார்ச் 6இல் நடத்த ஐரோப்பிய கவுன்சில் திட்டமிட்டுள்ளது.