முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் 
செய்திகள்

‘மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு ஆணவத்தின் உச்சம்’

Staff Writer

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்ட வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி மொழியைக் கற்பிக்காவிட்டால் கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னது ஆணவத்தின் உச்சம். அவருக்குத் தமிழ்நாட்டின் வரலாறும் தெரியாது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் தெரியாது, அரசியல் சாசனம் உருவாகிய வரலாறும் தெரியாது என்பவற்றை அவருடைய ஆணவப் பேச்சு காட்டுகிறது.

மாநில அரசின் மொழிக்கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை, மாநில அரசின் உண்மை. இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது என்பது அவருக்குத் தெரியுமா?. இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஜவஹர்லால் நேரு அவர்களும் இந்திரா காந்தி அவர்களும் தந்த உறுதிமொழிகளையாவது அவருக்குத் தெரியுமா?

நாடாளுமன்றம் அனுமதித்த நிதியை இந்தி மொழியைக் கற்பிக்காத மாநிலத்திற்கு தரமாட்டோம் என்று கல்வி அமைச்சர் சொல்வது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அவருக்குத் தெரியுமா?. தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.