திருமணமாகாத ஜோடிகளுக்கு தங்கள் ஓட்டல்களில் தங்குவதற்கு அனுமதியில்லை எனும் புதிய விதியை ஓயோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓட்டல் முன்பதிவு நிறுவனமான ஓயோ, தனது பங்குதாரர் விடுதிகளுக்கு புதிய வருகை விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு முதல் மீரட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய வழிகாட்டுதலின்படி, திருமணமாகாத ஜோடிகள் இனி ஓயோ விடுதிகளில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.
ஓயோ நிறுவனத்தின் திருத்தப்பட்ட விதிகளின்படி, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ஜோடிகள் விடுதிகளுக்கு வரும்போது தங்களது உறவுமுறை குறித்த சரியான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மேலும், திருமணமாகாத ஜோடிகளின் முன்பதிவுகளை நிராகரிக்கும் அதிகாரத்தை தனது பங்குதாரர் விடுதிகளுக்கு ஓயோ நிறுவனம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள தனது பங்குதாரர் விடுதிகளில் இந்த விதிமுறையை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ள ஓயோ நிறுவனம், இதற்கான வரவேற்பையும் கள நிலவரங்களையும் பொறுத்து மேலும் பல நகரங்களில் இந்த விதிமுறையை விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாக ஓயோ நிறுவனத்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ஓயோ விடுதிகளில் திருமணமாகாத ஜோடிகளை அனுமதிக்க கூடாது என்று மீரட்டில் உள்ள சமூக அமைப்புகள் சில மாதங்களாகத் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், ஓயோ நிறுவனம் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.