ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஃபோர்டோ முக்கிய இலக்காக இருந்ததாகவும் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, ஃபோர்டோ மீதான தாக்குதலை இராணுவமும் ஒப்புக்கொண்டது.
ஃபோர்ட்டோ அணுசக்தி தளம் ஏன் முக்கியமானது?
ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 96 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஃபோர்டோ ஈரானின் இரண்டாவது அணுசக்தி செறிவூட்டல் நிலையமாகும். நடான்ஸுக்கு பிறகு இதுவும் ஒரு முக்கிய மையமாகக் கருதப்படுகிறது.
ஒரு மலையின் ஓரத்தில் இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்திற்கான கட்டுமானம் 2006இல் தொடங்கப்பட்டாலும், இது 2009லிருந்துதான் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதை ஈரானும் அதே ஆண்டில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது.
மண்ணுக்குள் 260 அடி ஆழத்தில் உள்ள இந்த தளம், வான்வழித் தாக்குதல்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை அமைப்புகளால், இந்த தளம் பாதுகாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்த தளத்தை அவ்வளவு எளிதில் தாக்கிவிட முடியாது.
அடி ஆழம் வரை துளைத்துக்கொண்டு சென்று பதுங்கு குழிகளை அழிக்கும் 'பங்கர் பஸ்டர்' குண்டுகளை போட்டால் மட்டுமே இதை அழிக்க முடியும். இந்த குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளதால் இந்த தளத்தை தாக்குமாறு அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஏற்கனவே முறையிட்டுள்ளது. அதன்படி இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.
பங்கர் பஸ்டர் குண்டுகள் என்றால் என்ன?
இந்த பங்கர் பஸ்டர் குண்டுகளை வீச, பி-2 என பெயரிடப்பட்ட அதிநவீன போர் விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. ஒவ்வொரு பி-2 குண்டுவீச்சு விமானமும், தலா இரண்டு ஜி.பி.யூ-57 பங்கர் பஸ்டர் குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த குண்டுகள் ஒவ்வொன்றும் 13.6 டன் எடை கொண்டவை.
இந்த சக்திவாய்ந்த குண்டுகள் வெடிக்கும் இடம், முற்றிலும் மண்ணோடு மண்ணாகி விடும் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் பற்றிய விவரங்களை ஈரான் அரசு முழுமையாக வெளியிடவில்லை.
ஃபோர்டோ அணு சக்தி மையத்தின் நுழைவாயில் மற்றும் பின்புற கேட்டுகள் மட்டுமே சேதம் அடைந்துள்ளதாக, அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
உண்மை நிலவரம் போக போகத்தான் தெரிய வரும்...!