செய்திகள்

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா!

Staff Writer

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாடு மீது கடந்த 2022ஆம் ஆண்டு போர் தொடுத்தது. ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தவித்த உக்ரைனுக்கு ஆயுத உதவியை செய்ய முன்வந்தார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன். 

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று, அதிபரானார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டது. முன்னாள் அதிபர் ஜோபைடன் கடைப்பிடித்து வந்த கொள்கையை அடியோடு மாற்றினார் டிரம்ப். ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீட்டு தரமுடியாது, நேட்டோவில் உக்ரைனுக்கு இடம் அளிக்க முடியாது என்று டிரம்ப் கூறி வருகிறார். 

மேலும் உக்ரைனுக்கு இதுவரை அளித்து வந்த ஆதரவுக்கு பிரதிபலனாக அந்த நாட்டில் உள்ள அரிய வகை கனிம வளங்களை காலவரையின்றி வெட்டி எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று டிரம்ப் புதிய நிபந்தனையை விதித்தார். ஆனால் ஜெலன்ஸ்கி இதற்கு பணிந்து கொடுக்கவில்லை. இதனால், வெள்ளை மாளிகையில் இருவருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் போது வாக்குவாதம் கூட ஏற்பட்டது. இந்த நிலையில்தான், உக்ரைனுக்கு வழங்கி வந்த நிதி உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

'பிரச்னைகளை முடிப்பதற்கு நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்பதால் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் என்ற நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதால் அமெரிக்க இந்த முடிவு எடுத்துள்ளது' என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.