வடிவேல் ராவணன்  
செய்திகள்

பா.ம.க.விலிருந்து வடிவேலு ராவணன் நீக்கம்!

Staff Writer

பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் ராவணன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக முரளி சங்கர் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அறிவித்துள்ளார்.

பாமகவில் அதிகார மோதல் உச்ச கட்டத்தில் உள்ளது. அண்மையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல் தலைவராக செயல்படுவார் என்றும் இனி தானே பாமக தலைவர் என்றும் அறிவித்தார். இதனால், பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மிகக் கடுமையான மோதல் வெடித்தது.

டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியானதும், பாமக பொருளாளர் திலகபாமா, கட்சியில் ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது என்று அன்புமணிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதற்கு எதிர்வினையாற்றிய பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், "திலக பாமா நன்றியுணர்ச்சி இல்லாமல் பேசுகிறார், அவர் பதவி விலக வேண்டும்" என்று வலியுறுத்தி கண்டனம் தெரிவித்தார்.

அதன்பிறகு பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் அதிகரித்து, இருவரும் தனித்தனியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், ராமதாஸ் நடத்திய ஆலோசனைகளில் பங்கேற்கவில்லை.

அன்புமணி ராமதாஸ், சோழிங்கநல்லூரில் நடத்திய மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல் நாளில் பங்கேற்காத வடிவேல் ராவணன், இரண்டாவது நாளில் பங்கேற்றார். அதேசமயம், ராமதாஸ் நடத்திய ஆலோசனையில் பாமக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார். பாமக பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளின் பதவிகளைப் பறித்த ராமதாஸ், தமது ஆதரவாளர்களை அந்தப் பொறுப்பில் நியமித்து வருகிறார்.

அண்மையில், வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை தலைவரான வழக்கறிஞர் பாலுவை நீக்கிவிட்டு, வழக்கறிஞர் கோபுவை அந்தப் பொறுப்பில் நியமித்தார் ராமதாஸ். அந்தவகையில் தற்போது வடிவேல் இராவணன் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, முரளி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாமகவின் மாநிலப் பொதுச் செயலாளராக, முரளி சங்கர் இன்று முதல் (15.06.2026) நியமனம் செய்யப்படுகிறார். எனவே இவருக்கு நமது கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். அதோடு, "பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனை கண்டு பிடிப்போருக்கு ரூ.100 பரிசு தருவேன்" என்றும் ராமதாஸ் கூறி இருந்தார்.