தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 
செய்திகள்

பரந்தூர் மக்களை சந்திக்கும் விஜய்: கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை!

Staff Writer

பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினரை தனியார் திருமண மண்டபத்தில் இன்று விஜய் சந்திக்கும் நிலையில், காவல் துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் போலீஸ் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று போராட்டகுழுவினரையும், கிராம மக்களையும் சந்திக்கலாம் என தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் திடல் பகுதியில் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் போலீசார் பரந்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டத்தை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர்.

போராட்ட குழுவினரும் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளும் அம்பேத்கர் திடலில்தான் கூட்டத்தை நடத்துவோம் என மீண்டும் மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வலியுறுத்தினர். இதற்காக ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் திடலையும் தயார் செய்து வந்தனர். அம்பேத்கர் திடலில் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்களும் போராட்ட குழுவினரும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இடத்தை ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நடந்து வந்த நிலையில், பரந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 11:30 மணியில் இருந்து 12.30 மணி வரை பரந்தூர் போராட்ட குழுவினரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்திப்பார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

முன்னதாக விஜய் போராட்ட குழுவினரை சந்திக்க பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்திருந்தது. அதன்படி, பரந்தூர் விமான நிலையம் அமையுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் மக்களை விஜய் சந்திக்க வேண்டும். சட்ட ஒழுங்கு நலனைப் பேண காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். கிராம மக்களை சந்திக்கும்போது தங்களது கட்சியினரால் அல்லது ரசிகர்களால் பொதுமக்களுக்கோ அல்லது பொதுச்சொத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.