தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பரபரப்பான தமிழக அரசியல் சூழலுக்கு மத்தியில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளி சந்தை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு கூடும் முதல் பொதுக்குழுக் கூட்டமாகும். சுமார் 2500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டுள்ளனர். அரசியல் கட்சி செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே இதுவரை கூடியிருந்த நிலையை மாற்றி தருமபுரி போன்ற மாவட்டத்தில் கூடுவது இதுவே முதல்முறை.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அது தற்போது உறுதியாகியுள்ளது. அதன்படி, பொதுக்குழுவில் ஒருமனதாக விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை விஜய பிரபாகரன் கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருந்தார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இதையடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் விஜய பிரபாகரனுக்கு கட்சியில் புதிய முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேமுதிகவில் ஏற்கனவே தேமுதிக செயலாளர் பதவியில் இருக்கும் எல்கே சுதீஷ்க்கு தேமுதிக பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.