(இடமிருந்து வலம்) எழுத்தாளர் மு. குலசேகரன், கவிஞர் மதார், எழுத்தாளர் குமாரநந்தன்  
செய்திகள்

விஜயா வாசகர் வட்ட விருது அறிவிப்பு!

Staff Writer

கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜெயகாந்தன் விருது எழுத்தாளர் மு. குலசேகரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக புத்தக தினத்தை முன்னிட்டு, கோவை விஜயா பதிப்பகத்தின் ‘விஜயா வாசகர் வட்டம்’ சார்பில், சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகின்றன. 2025ஆம் ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ‘ஜெயகாந்தன் விருது’க்கு எழுத்தாளர் மு. குலசேகரன், ‘மீரா விருது’க்கு கவிஞர் மதார், ‘புதுமைப்பித்தன் விருது’க்கு எழுத்தாளர் குமாரநந்தன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிறந்த நூலகருக்கான ‘சக்தி வை.கோ. விருது’செங்கோட்டை முழுநேர அரசு நூலகத்தின் மூன்றாம் நிலை நூலகர் கோ. ராமசாமிக்கும் சிறந்த புத்தக விற்பனையாளருக்கான ‘வானதி விருது’ தென்காசி வீரசிவாஜி புத்தக உலகம் சுகுமாருக்கும் வழங்கப்படுகிறது.

ஜெயகாந்தன் விருதுக்கு ரூ.1 லட்சமும், மீரா, புதுமைப்பித்தன், வானதி, சக்தி வை.கோ. விருதுகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

மேலும் கோவை தொழிலதிபர் பி.எல். சுப்ரமணியன் வழங்கும் சிறந்த வாசகர்களுக்கான ‘அன்பின் பெருமழை அப்பச்சி பழனியப்பர் நல் வாசகர் விருது’ மூவருக்கு தலா 25 ஆயிரம் வழங்கப்பட இருக்கிறது.

பத்தாவது ஆண்டாக நடைபெற இருக்கும் விஜயா வாசகர் வட்ட விருதுகள் வழங்கும் விழா, உலக புத்தக தினமான வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, காலை பேரூராதீனம், பேரூர்த் தமிழ் கல்லூரி வளாகத்திலுள்ள முத்தமிழ் அரங்கில் நடைபெற உள்ளது.