நடிகை விஜயலட்சுமி - நாதக சீமான் 
செய்திகள்

விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மனு தள்ளுபடி!

Staff Writer

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக்கூறி அதற்கு எதிராக சீமான் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி, சீமானுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பிறகு வழக்கு பட்டியலிடப்படவில்லை.

இந்த சூழலில் இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சீமான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான்சத்தியன் ஆஜராகி, ஏற்கனவே 2011ஆம் ஆண்டு வழங்கிய புகாரை திரும்ப பெற்றுக் கொண்டதாகவும், பின்னர் 2023இல் கொடுக்கப்பட்ட புகாரையும் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். தற்போது தூண்டுதலின் பேரில்தான் இந்த புகார் கொடுக்கப்பட்டதாகும், எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதற்கு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், இந்த வழக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு என்றும், ஏற்கனவே இது குறித்து நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும், அதை சீல் செய்யப்பட்ட கவரில் தாக்கல் செய்தார்.

காவல்துறையிடம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி நடிகை விஜயலட்சுமி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருவருக்கும் தொடர்பு இருந்ததாகவும், ஆனால் 2011ஆம் ஆண்டு தான் இந்த விவகாரம் வெளிவந்ததாகவும், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, எதற்காக வழக்கை திரும்ப பெற்றார்? வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறை பாலியல் வன்கொடுமையை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார். சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது எனக்கூறிய நீதிபதி, விஜயலட்சுமி வழக்கை தள்ளுபடி செய்யக் கூறி கொடுக்கப்பட்ட சீமான் வழக்கை தள்ளுபடி செய்தார்.

மேலும் இவ்வழக்கு மீதான விசாரணையைப் பன்னிரண்டு வாரத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.