செய்திகள்

விகடன் இணையப் பக்கம் முடக்கம்- நடப்பது என்ன?

Staff Writer

விகடன் இணையதளத்தின் முதன்மைப் பக்கம் நேற்று இரவு 7 மணி முதல் திடீரென பல இடங்களில் தெரியவில்லை. இதுகுறித்து வாசகர்கள் விகடன் தளத்தினருக்குத் தெரிவித்தனர். 

உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய விகடன் ஊடகக் குழுவினர், குறிப்பிட்ட சில இணைய சேவை நிறுவனங்கள் மூலம் தடை செய்யப்பட்டதாக அறிந்தனர். 

பி.எஸ்.என்.எல். உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள், ஹேத்வே, ஏசிடி போன்ற கம்பிவழி இணையச்சேவைகளில் விகடன் தளத்தின் முதன்மைப் பக்கம் vikatan.com மட்டும் கிடைக்கவில்லை. ஆனால் அதன் உள்பகுதிகளான ஆனந்தவிகடன், சினிமா பக்கங்களைப் பார்க்கமுடிகிறது என்பது தெரியவந்தது.

இதனிடையே, விகடன் பிளஸ் எனும் மின்னிதழில் வெளியான பிரதமர் மோடி தொடர்பான கேலிச்சித்திரத்தைக் கடுமையாக எதிர்த்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு கடிதம் அனுப்பினார். 

மேலும், அவர் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி இரஞ்சனா பிரகாஷ் தேசாய்க்கும் இதுகுறித்து கடிதம் அனுப்பினார்.  

இதனால்தான் விகடன் முடக்கப்பட்டது எனத் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து விகடன் தரப்பில் விசாரித்தபோது, அரசிடமிருந்து தங்களுக்கு முறைப்படியான அறிவிப்பு ஏதும் வரவில்லை என்றும் வெளிநாடுகளில் விகடன் பக்கத்தைப் பார்ப்பதில் தடங்கல் இருப்பதாகத் தகவல் இல்லை என்றும் இந்தியாவில் மட்டுமே குறிப்பிட்ட இணையச்சேவை நிறுவனங்களின் இணைப்பைப் பயன்படுத்துவோர் விகடன் தளத்தைப் பார்க்கமுடியாதபடி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினர். 

மைய அரசின் அமைச்சகத்திடமிருந்து முறைப்படியான அறிவிப்பு வராதநிலையில், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். இணைப்பு கொண்டவர்களுக்கும் விகடன் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. 

ஏர்டெல், ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு சேவை இணைப்பு உடையவர்களுக்கு முடக்கப்பட்டுள்ள வேளையில், ஹேத்வே, ஏசிடி ஆகிய கம்பிவழி இணையச் சேவைகளின் மூலம் மட்டும் விகடன் பக்கத்தைப் பார்க்கமுடிகிறது. 

விகடனின் இணையதளப் பக்கம் முடக்கப்பட்டது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதில் விகடன் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.