முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கும்பமேளாவில் நீராடியதாக பரப்பப்படும் புகைப்படம் தவறானது. இந்த படம், 1938ஆம் ஆண்டு நேரு தனது தாயின் அஸ்தியை பிரயாக்ராஜில் (அப்போது அலஹாபாத்) கரைத்த புகைப்படம்.
பரவிய தகவல்: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கும்பமேளாவில் நீராடுவது போன்ற புகைப்படத்தை எக்ஸ் சமூக ஊடகத்தில் பலரும் (இணைப்பு 1, இணைப்பு 2, இணைப்பு 3) பகிர்ந்திருந்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு கங்கையில் புனித நீராடியதைத் தொடர்த்து, “கங்கையில் நீராடினால் வறுமை நீங்கிடுமா?" என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்ததை ட்ரோல் செய்த வலதுசாரிகள், ‘நேரு 1954ஆம் ஆண்டு பிரயாக்ராஜில் நீராடி வறுமையை ஒழித்தார்’ என்ற தகவலை பரப்ப தொடங்கினர்.
உண்மை சரிபார்ப்பு: நேருவின் வாழ்க்கை வரலாற்றை பேசும் தி நேருஸ் (The Nehrus) என்ற புத்தகத்தின் விமர்சனம் இந்தியா டுடேவில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது. நேரு நீராடும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்த படம் 1938இல் எடுக்கப்பட்டது. நேருவின் தாயார் ஸ்வரூப் ராணி நேரு ஜனவரி 10, 1938இல் காலமானர். அவரின் அஸ்தியை நேரு அலஹாபாத்தில் கரைத்தபோது எடுக்கப்பட்ட படம் இது.
கும்பமேளாவிற்கு வந்தாரா நேரு?
1954ஆம் ஆண்டு நடந்த கும்பமேளாவிற்கு குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு உட்பட பல அரசியல் தலைவர்கள் வருகை தந்ததாக தி குயின்ட் செய்தி கூறுகிறது. ஆனால், ராஜேந்திர பிரசாத் மட்டுமே நீராடியுள்ளார். நேரு அதற்கான ஏற்பாடுகளை கண்காணித்தாக கூறப்படுகிறது. ‘அமிர்தா பஜார் பத்ரிகா’ செய்தித்தாளின் அறிக்கைப்படி நேரு நீராடவில்லை என்பது மேலும் உறுதியாகிறது.
எக்ஸ் தளத்தில் வைரலான நேருவின் புகைப்படம் 1954ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது இல்லை. அது 1938ஆம் ஆண்டு, நேரு தன்னுடைய அம்மாவின் அஸ்தியைக் கரைக்கும்போது எடுக்கப்பட்ட படமாகும்.
இந்த செய்திக்கட்டுரையை logically facts தளம் முதலில் வெளியிட்டது.
மூலச்செய்தி இணைப்பு : Fact Check: No, that's not Jawaharlal Nehru's image from 1954 Kumbh Mela
இதை Shakti Collective fact check (சக்தி கலெக்டிவ்) குழுவின் ஒரு பகுதியாக அந்திமழை ஊடகம் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.