சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் அடுத்த சச்சின் என இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் விராட் கோலி. தற்போது அவர், 14 ஆண்டுகால டெஸ்ட் பயணம் முடிவுக்கு வந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
“எனது டெஸ்ட் வாழ்க்கையை நான் புன்னகையுடன் திரும்பி பார்ப்பேன். டெஸ்ட் போட்டி எனக்கு பல்வேறு பாடங்களை கற்றுத்தந்தது. கடினமான முடிவாக இருந்தாலும் இதுவே சரியான முடிவு என தோன்றுகிறது.” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
2011இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக முதன் முதலில் டெஸ்டில் களமிறங்கிய விராட், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியே அவரது கடைசி போட்டியாக அமைந்ததுள்ளது.
இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 9,230 ரன்களை குவித்துள்ளார். இதில் 30 சதங்களும் 31 அரைசதமும் அடங்கும். அதேபோல், அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமை விராட் கோலையை மட்டுமே சாரும்.
36 வயதான விராட் கோலி கடந்தாண்டு டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், தற்போது சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்னர் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.