தற்காலிக அரசியல் பயனுக்காக தவறான முடிவை எடுக்க மாட்டோம் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
'மதச்சார்பின்மை காப்போம்' என்ற தலைப்பில் விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நேற்று பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. டிவிஎஸ் டோல்கேட்டில் தொடங்கிய பேரணியை கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பேரணியானது குட்ஷெட் பாலம், தலைமை அஞ்சல் அலுவலகம், ஒத்தக் கடை வழியாக மாநகராட்சி அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.
அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திருமாவளவன் பேசியது: “தமிழகத்தில் எல்லோரும் தேர்தல் கணக்குகளை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். யார் எந்தக் கூட்டணி, எத்தனை இடங்கள். யார் முதல்வர் என்ற கவலை நமக்கு இல்லை. திமுகவிடம் விசிக சிக்கிக் கொண்டு தவிக்கிறது என அரசியல் அறியாமையில் அலையும் அற்பர்கள், அரைவேக்காடுகள் பேசுகின்றனர். தமிழக அரசியலின் திசைவழியை தீர் மானிப்பவர்கள் விசிகவினர்.
இந்திய அரசியலையே மதச்சார் பின்மைக்கு எதிரானவர்கள், ஆதரவானவர்கள் என்று கூர்மைப்படுத்தும் அரசியலை விசிக மட்டும் தான் முன்னெடுக்கி றது. இதன் வலிமையை உணராதவர்கள் திருமாவளவனுக்கு அரசியல் பண்ணத் தெரியவில்லை, பேரம் பேசவும். பிளாக் மெயில் செய்யவும் தெரியவில்லை, துணை முதல்வர் வேண்டும் என்றுகேட்க மறுக்கிறார் என்கின்றனர். முதல்வர் பதவியை பற்றியே நாங்கள் கவலைப்பட வில்லை. பிரதமர் பதவியை கைப்பற்றுங் கள் என்று தான் அம்பேத்கர் வழிகாட்டி உள்ளார். அது தான் அதிகாரம் உள்ள பதவி; அது தான் அரசு.
எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று திருமாவளவனுக்கு தெரியும். 25 ஆண்டுகள் தில்லுமுல்லு தேர்தல் அரசியலில் தாக்குப் பிடித்துள்ளது விசிக. சமகாலத்தில் எங்களோடு புறப்பட்டவர்கள் வழிதவறி போய்விட்டனர். இன்று தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விசிக உள்ளது. ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவிலும் வளர்ந்துள்ளது. எங்களுக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை.
கூட்டணியில் இருந்தும் திருச்சியில் நாம் பேரணிநடத்த அனுமதியில்லை.பல இடங்களில் கொடியேற்ற, பொதுக் கூட் டம் நடத்த முடியவில்லை. 25 ஆண்டுகளாக இப்படி பல நெருக்கடிகள். இப்படித்தான் அடக்குமுறை, நெருக் கடிகளை தாக்குப்பிடித்து இந்த இயக்கம் கால்நூற்றாண்டு காலம் இந்தக்களத்தில் போராடி, இன்று தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது.
நாம் ஏன் திமுகவை ஆதரிக்கிறோம் ? திமுக கூட்டணியை விட்டு வெளியே நின்றால் என்ன ஆகிவிடும் ? யாரும் விசிகவை எதுவும் செய்ய முடியாது. நாம் அம்பேத்கர் பெரியார் பிள்ளைகள், மார்க்சின் கருத்தியல் வாரிசுகள் அதனால் ஒரு முடிவை துணிவாக எடுத்து உறுதியாக நிற்கிறோம். எங்களுக்கான காலம் கனியும் வரை காத்திருப்போம். தற்காலிக விளைச்சலுக்காக அவசர முடிவு எடுப் பவர்கள் நாங்கள் இல்லை. எங்களை நோக்கி அதிகாரம், நாற்காலிகள் வரும். எங்களை ஒரு ஓரமாக உட்காரு என்று சொன்னால், அதுதான் அந்த மேடையின் மையமாக மாறும்.
திமுகவுடன் கொண்டிருக்கும் உறவு என்பது கொள்கை உறவு. இடங்களை பற்றி பேச்சுவார்த்தையில் முடிவு செய் வோம். திமுக அரசோடு இருக்கிற விமர்சனங்களை தாண்டி தேர்தல் உறவை வைத்துக் கொள்கிறோம் என்றால், அது தொலைநோக்குப் பார்வையுடன் கொண்ட கொள்கை முடிவு. பலர் பல வேஷம் போடு கின்றனர்.
சிலர் சினிமா புகழோடு ஹீரோ என்ற வேஷத்தோடு வந்துள்ளனர். பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சினிமா ஹீரோவுக்கு பின்னால் செல்வார்கள் என்கிறார்கள். நீங்கள் ஏமாறமாட்டீர்கள் என எனக்குத் தெரியும். அம்பேத்கரை ஏற்றுக் கொண்ட யாரும் எந்த விளம்பர மாயைக்கும் பணிய மாட்டான்; விலைபோகமாட்டான்.
சினிமாக்காரர்களுக்கு அந்தந்த ஏரியாவில் தான் கூட்டம் வரும். அம்பேத்கருக்கு உலகம் முழுவதும் வரும். தேர்தல் பேரம், வெற்றி தோல்வியை விட கூட்டணி கணக்குகளைவிட தேசம்முதன் மையானது. தமிழ் தேசியம் என்ற பெயரால் சிலர் திமுக வெறுப்பு அரசியலை மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக திராவிட அரசியலையே எதிர்த்து. வெறுப்பு பரப்புவதன் மூலம் சனாதன சக்திகளுக்கு துணை போகிறார்கள். இதை நம் புரிந்துகொள்ள வேண்டும்.
இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும். தேர்தலில் சீட் முக்கிய மல்ல; ஏற்ற கொள்கையில் தெளிவாக, உறுதியாக இருக்க வேண்டும். தற்காலிக அரசியல் பயனுக்காக தவறான முடிவை எடுக்க மாட்டோம்.” இவ்வாறு அவர் பேசினார்.