முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சி தலைவர்கள் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டன.
இந்நிலையில், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர். ஆழ்வார்பேட்டையில் அவரது இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது, தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்ற கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகின. பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முத்தரசன், சண்முகம், திருமாவளவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், “மூன்று கட்சிகள் சார்பில் முதலமைச்சரை சந்தித்து சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச் சட்ட இயக்க கோரிக்கை வைத்தோம். தனி சட்டத்திற்கான தேவையை முதலமைச்சரிடம் எடுத்துரைத்தோம். அதனை அவர் ஏற்றுக் கொண்டார்" என்று தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முத்தரசன், "சாதிய ஆணவக் கொலைகள் அதிகரிப்பது முற்போக்கான மாநிலத்துக்கு அழகல்ல. ஒரே சாதியில் கூட காதலித்தால், அதை தங்களுடைய குடும்ப கவுரவ பிரச்சினையாக கருதும் மனநிலை இருக்கிறது. 3 கட்சிகள் சார்பில் முதலமைச்சரை சந்தித்து சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச் சட்ட இயக்க கோரிக்கை வைத்தோம். அதனை அவர் ஏற்றுக்கொண்டார்" என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், "ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதால் முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். ஆணவக் கொலையை தடுக்க, சட்டம் இயற்ற தேசிய பெண்கள் ஆணையம் முன்மொழிந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன. தனிச் சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருப்பதால் முதலமைச்சரிடம் பேசினோம்" என்று கூறினார்.