பூலே திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிராமணர்களையும், சில காட்சிகளை நீக்க சொல்லும் தணிக்கை வாரியத்தையும் பிரபல இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சாதி, பாலின பாகுபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்த ஜோதிராவ் பூலே - சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'பூலே' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்தது.
இப்படத்தை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கியிருக்கிறார். படத்திற்கு எழுந்துள்ள பிரச்னைகளால் படத்தின் வெளியீட்டை ஏப்ரல் 11ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிராமண சமூகத்தினரை இத்திரைப்படத்தில் தவறாக சித்தரித்திருப்பாதக் கூறி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
சில அமைப்புகளும் படம் பொய்யான தகவல்களைக் கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள்.
தணிக்கை வாரியம் படத்திற்கு முதலில் யூ சான்றிதழ் வழங்கியிருந்தது. பிறகு படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் படத்தில் சில கட்சிகளையும் நீக்க தணிக்கை வாரியம் கூறியிருக்கிறது.
இந்த நிலையில், தணிக்கை வாரியத்தின் செயலையும் பிராமணர்களையும் பிரபல இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதாவது:
”நாட்டில் சாதிகளே இல்லை என்றால், பூலே திரைப்படத்துக்கு எதிராக ஏன் பிராமணர்கள் கோபப்படுகிறார்கள்? சாதியே இல்லையென்றால், நீங்கள் யார்? ஏன் கோபத்தில் எரிந்து விழுகிறீர்கள்? இந்தியாவில் சாதி உள்ளதா இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள். மக்கள் முட்டாள் இல்லை. சினிமா ஏன் பொய் சொல்ல வேண்டும்.
தணிக்கைக்கு செல்லும் ஒரு படத்தை, சென்சார் அதிகாரிகள் நால்வரை தாண்டியும் சில குழுக்கள் பார்ப்பதும், பின் அதை எதிர்ப்பதும் எப்படி? இங்கு மொத்த சிஸ்டமே தவறாக உள்ளது. இப்படி இன்னும் எத்தனை படங்களை முடக்கியுள்ளார்கள் என தெரியவில்லை.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.