தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயராது என்றும் கட்டணம் உயரும் என்று வெளியாகும் செய்திகள் தவறானவை என்றும் அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அரியலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:
“இரண்டு மூன்று நாள்களாக குறிப்பிட்ட சில ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு என்ற செய்தி வந்துக் கொண்டு இருக்கிறது. அந்த செய்தி தவறானது.
தமிழ்நாடு அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தாது என்று அறிவித்த காரணத்தால், தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களின் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்டு, ஒரு தகவல் அறிக்கையைத் தாக்க செய்ய அறிவுரை வழங்கியிருக்கிறது நீதிமன்றம். அதன்படி கருத்துக்கேட்கப்படும். அந்த கருத்துகள் நீதிமன்றத்தில்தான் வழங்கப்படும். பொதுமக்களுக்கு சுமை ஏற்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் வலியுறுத்தப்படும். ஏற்கெனவே மின் கட்டண உயர்வு தொடர்பாக செய்தி வந்தபோது, கட்டணம் உயராது என்பதை தெளிவுபடுத்தினோம். அதேபோல்தான் பேருந்து கட்டண உயர்வும் இருக்காது.
போக்குவரத்துத்துறை பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும், மத்திய அரசு பல முறை டீசல் விலையை உயர்த்தி இருந்தாலும் பேருந்து கட்டணம் உயராது.” என்றார்.