எம்.எஸ். தோனி 
செய்திகள்

சி.எஸ்.கே.வுக்காக அடுத்த சீசன் ஆடுவாரா…? - மனம் திறந்த தோனி!

Staff Writer

ஓய்வு குறித்து முடிவெடுக்க இன்னும் நேரம் இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

நேற்றைய போட்டியில் குஜாராத் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது சென்னை அணி. போட்டிக்குப் பின்னர் பரிசளிப்பு நிகழ்வின் போது பேசிய எம்.எஸ். தோனி, “இறுதியில் நல்லவெற்றி. அரங்கம் நிறைந்திருந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் ஓரளவு ரசிகர்கள் வந்திருந்தனர். வெற்றியுடன் முடித்துள்ளோம், அனைவரின் சிறப்பான பங்களிப்பாக இருந்தது.

என்னுடைய எதிர்காலம் பற்றி முடிவெடுக்க இன்னும் நான்கைந்து மாதங்கள் ஆகும். எனக்கு இன்னும் நேரம் இருக்கிறது.

ஒவ்வொரு சீசனுக்கும் நான் உடல் உறுதியைப் பேண 15 சதவிகிதம் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கிறது. வீரர்களின் பெர்பார்மென்ஸால் ஓய்வை அறிவிக்க வேண்டுமெனில், ஒரு சில வீரர்கள் 22 வயதிலேயே ஓய்வை அறிவிக்க வேண்டியிருக்கும். அதனால் அப்படியில்லை. வீரர்கள் எவ்வளவு உடற்தகுதியோடு இருக்கிறார்கள், எவ்வளவு பசியோடு இருக்கிறார்கள். அணிக்கு எப்படி பங்களிப்பு செய்கிறார்கள் என்பதே முக்கியம். எனக்கு நேரம் இருக்கப்போகிறது. ராஞ்சிக்கு செல்லப்போகிறேன். கொஞ்சம் பைக் ரைடு செல்லலாம் என நினைக்கிறேன். அதன்பிறகு முடிவெடுக்கலாம் என நினைக்கிறேன். நான் ஓய்வு பெறுகிறேன் என்றும் சொல்லவில்லை. மீண்டும் வருகிறேன் என்றும் சொல்லவில்லை. இன்னும் நேரமிருக்கிறது.

வைபவ் சூர்யவன்ஷி காலில் விழுந்தபோது எனக்கு வயதாகிவிட்டது என்றுதான் தோன்றியது. எங்கள் அணி வீரர் ஆண்ட்ரே சித்தார்த்திடம் அவரின் வயது என்னவென்று கேட்டேன். சரியாக என்னை விட 25 வயது குறைவாக இருந்தார். அதையெல்லாம் கேட்கும்போதுதான் எனக்கு வயதாகிவிட்டதாகத் தோன்றியது.” என்றார்.