இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பானது, அடுத்த 24 மணிநேரத்தில் வெளியாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அதிகாலையில் அறிவித்தார்.
ஆனால், டிரம்ப்பின் போர் நிறுத்த முடிவுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், "இப்போதிலிருந்து சுமார் ஆறு மணி நேரத்தில் இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் நிறுத்தம் தொடங்கும். 24 வது மணி நேரத்தில் மோதல் அதிகாரப்பூர்வமாக முடிவடையும். எல்லாம் சரியாக நடக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில், இரு நாடுகளையும் நான் வாழ்த்த விரும்புகிறேன்.” என்றவர் இஸ்ரேல்-இரான் இடையேயான போரை "12 நாள் போர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இது பல ஆண்டுகள் நீடித்து, முழு மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் பேரழிவை ஏற்படுத்தியிருக்கக் கூடிய ஒரு போர், ஆனால் அது நடக்கவில்லை, ஒருபோதும் நடக்காது." என்று டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், 'எங்களுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை' என்று இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் " ஈரான் பலமுறை தெளிவுபடுத்தியது போல, இஸ்ரேல்தான் இரான் மீது போரை தொடங்கியது, மாறாக நாங்கள் அல்ல. தற்போது, எந்தவொரு சண்டை நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த ஒப்பந்தமும் இல்லை. இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சி இரான் மக்களுக்கு எதிரான அதன் சட்டவிரோத ராணுவ நடவடிக்கைகளை டெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க நமது சக்தி வாய்ந்த ஆயுதப் படைகளின் இராணுவ நடவடிக்கைகள் கடைசி நிமிடம் வரை, அதாவது அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தன," என்று சையத் அப்பாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.