செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை: மூதாட்டியை மிரட்டிய திமுக நிர்வாகி… இணையத்தில் வைரலான வீடியோ!

Staff Writer

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வடக்கு திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் திமுக நிர்வாகி பிரசன்னா, மகளிர் உரிமை தொகையாக வழங்கப்படும் 1000 ரூபாய் குறித்து பெருமையாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட வயதான பெண் ஒருவர், “1000 ரூபாய் பற்றி பேசுறீங்க... அதை வைத்து ஒரு சின்ன தங்க மூக்குத்தி கூட வாங்க முடியாது” என்ற கேட்ட வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

தமிழ்நாடு அரசு சர்பில் மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பற்றி பாராட்டி, திமுக நிர்வாகி பிரசன்னா திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். மேலும் சிலர் 1000 ரூபாய் பிச்சை காசு என விமர்சிப்பவர்களை கண்டித்துக் கொண்டிருந்தார் பிரசன்னா.

அப்போது குறுக்கிட்ட ஒரு பெண், ‘அதை வைத்து ஒரு சின்ன மூக்குத்தி கூட வாங்க முடியாது’ என்று பதிலடி கொடுத்தார். ‘இன்றைக்கு நகை என்ன விலை விற்கிறது தெரியுமா?’ எனகேட்டார். உடனே பிரசன்னா, ‘ஆத்தாவிற்கு ஆசையை பாருங்கள். 1000 ரூபாயில் 10 பவுனில் நகை கொடுத்தால் தான். 1000 ரூபாயை மதிப்பேன் என்கிறது. உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்டார். அதற்கு அந்த பாட்டி மாலதி என்கிறார். அப்போது பிரசன்னா மாதம் ஆயிரம் எனில் ஆண்டுக்கு 12000 கிடைக்கிறது என்கிறார்.

பின்னர் பாட்டியிடம் ’எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்’ என்று கேட்டார் பிரசன்னா. அப்போது பாட்டி ’தினமும் 300 சம்பாதிப்பதாகவும் மாதம் 9000 சம்பாதிப்பதாகவும்’ கூறுகிறார். உடனே பிரசன்னா, ‘மகளிர் உரிமை தொகை ஸ்லாப் இருக்கிறது. நீங்கள் தான் 9000 சம்பாதிப்பதாக கூறுகிறார்கள். நாளைக்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தினால் என்னை கேட்கக்கூடாது. இவரே 9000 என்றால் வீட்டுக்காரர் எவ்வளவு சம்பாதிப்பார்’ என்று கேட்ட பிரசன்னா, ’1000 ரூபா பிச்சை காசை வைத்து என்ன பண்றது? அதை நிப்பாட்டு என்கிறது பாஜக. இவங்க என்ன சொல்றாங்க? 1000 ரூபாயை வச்சிக்கிட்டு நான் என்ன பண்ணிட முடியும்னு கேட்கிறாங்க.’ என்கிறார். இப்படியாக வீடியோ முடிகிறது. தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.