உலகளவில் 13.8 கோடி குழந்தைகள் சட்டவிரோதமாக வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது.
குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்யும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12ஆம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "குழந்தை தொழிலுக்கு ரெட்கார்டு: குழந்தைகளுக்கு நியாயமான விளையாட்டு, பெரியவர்களுக்கு மரியாதையான வேலை" ஆகும்.
ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப், 2024 இல் உலகம் முழுவதும் 13.8 கோடி குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களாக இருந்துள்ளதாகவும், அவர்களில் 5.4 கோடி குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான வேலைகளைச் செய்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது.
கடைசியாக 2011-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 1.01 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.
இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலையில் அமர்த்துவது சட்டப்படி குற்றம் ஆகும். அதை மீறி குழந்தைகளை வேலையில் அமர்த்தும் முதலாளிகளுக்கு ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதத்துடன், 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
வணிக நோக்கத்திற்காக குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு ₹10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
குழந்தைகள் வேலை செய்துக் கொண்டிருப்பதை பார்த்தால் 'நவஜீவன்' என்ற மத்திய அரசின் இணையதளத்தில் பொதுமக்கள் யார்வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். குழந்தை தொழிலாளர் தொடர்பான புகார்களை 1098 என்ற கட்டணமில்லா எண்ணிலும் நாம் பதிவு செய்யலாம்.
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் குழந்தைகளின் உழைப்பில் வரும் வருமானம் நாட்டிற்கும் வீட்டிற்கும் சிறுமை என்றும், அவர்களின் உரிமைகளை தடுப்பது சமூக நீதிக்கு எதிரானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.