இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த பத்திரிக்கையாளரை தூக்கிச் செல்லும் மக்கள் 
உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் 5 பத்திரிக்கையாளர்கள் உட்பட 20 பேர் பலி!

Staff Writer

தெற்கு காசாவில் உள்ள மருத்துவமனை மீது நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பத்திரிக்கையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு மன்னிப்புக் கேட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, தாக்குதல் தொடர்பாக ராணுவம் விசாரணை நடத்தும் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-காசா இடையேயான் போர் இரண்டு வருடத்துக்கு மேல் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், தெற்கு காசாவில் உள்ள நஸர் மருத்துவமனை மீது நேற்று (ஆகஸ்ட் 25) மட்டும் இரண்டு முறை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக காசாவில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. முதலில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை கொண்டு ட்ரோன் தாக்குதலும், பின்னர் ஏவுகணை தாக்குதலும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில், 20 பேர் உயிரிழந்திருப்பதாகவும் ஏராளமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில், அசோஸியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் ஊடகவியலாளர் மரியம் டாகா (33), அல்-ஜசீராவின் ஒளிப்பதிவாளர் முகமது சாலமா, ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் ஹுசம் அல் மஸ்ரி, பாலஸ்தீனத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் மோசஸ் அபு தாஹா, அஹமது அபு அஸீஸ் ஆகிய 5 பத்திரிக்கையாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை அவர்கள் பணியாற்றி வரும் பத்திரிகை நிறுவனம் உறுதி செய்துள்ளது.

கடந்த 22 மாத கால இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் சுமார் 192 பத்திரிகையாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம் இந்த தாக்குதலை உறுதி செய்துள்ளது. பத்திரிகையாளர்கள் மீது குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. தாக்குதல் நடந்த மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பு இயங்கி வருவதாக இதற்கு முன்பு இஸ்ரேல் குற்றச்சாட்டு வைத்திருந்தது. இருப்பினும் அதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலை மிக தீவிரமாக்கியது. அதற்கடுத்த இந்த 22 மாதத்தில் மட்டும் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த சுமார் 62,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொது மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.