புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை தாக்கிய நபருக்கு அமெரிக்காவில் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரில் விரிவுரை மேடை ஒன்றில் 2022 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டார். முகமூடி அணிந்த ஒரு நபர் அவரை 12 முறை கத்தியால் குத்தியதுடன் அந்த தாக்குதலில் அவர் கண் பார்வையும் போய்விட்டது. ஒரு கையும் செயலிழந்துவிட்டது.
இத்தாக்குதலில் ஈடுபட்ட ஹதி மதார் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரைக் குற்றவாளி என நடுவர் மன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்தக் குற்ற விசாரணையின் போது சல்மான் ருஷ்டி “ஒரு முகமூடி அணிந்த நபர் என்னை கத்தியால் தலையிலும் உடம்பிலும் பனிரெண்டுக்கும் மேற்பட்ட முறை குத்தினார். நான் இறந்து விட்டதாக நம்பினேன். எழுத்தாளர்களின் பாதுகாப்பு பற்றிய உரைக்கு என்னை அழைத்தபோது இது நடந்தது” என்றார்.
தனக்குத் தண்டனை வழங்குவதற்கு முன் பேச்சுரிமை பற்றிப் பேசிய குற்றவாளி மதார், ருஷ்டியை போலியானவர் என்று குறிப்பிட்டார்.
ருஷ்டியின் கொலை முயற்சிக்காக மதாருக்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவருடன் மேடையில் இருந்த ஒருவரை காயப்படுத்தியதற்காக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இருவரும் ஒரே நிகழ்வில் காயமடைந்ததால், தண்டனைகள் ஒரே நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Knife: Meditations After an Attempted Murder என்ற நூலை இந்த தாக்குதலைத் தொடர்ந்து ருஷ்டி எழுதியது குறிப்பிடத்தக்கது.
-ம.தினோவிகா