தங்கச்சுரங்கம் இடிந்து விபத்து 
உலகம்

தங்கச்சுரங்கம் இடிந்ததில் 60 பேர் பலி!

Staff Writer

வட ஆப்பிரிக்க நாடான சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்ததில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

சூடானில் பல்வேறு தங்கச்சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டில் உள்ள மேற்கு கார்டோபான் மாகாணம், எல் நஹொட் நகரில் அல்-சாரா என்ற தங்கச்சுரங்கம் செயல்பட்டு வருகிறது.

சுரங்கத்தில், தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தங்கச்சுரங்கத்தின் கூரை இடிந்து விழுந்தது. இதில் 60 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தச் சுரங்கத்தில் உள்ள கிணறுகள், சுரங்கப் பாதைகள் மிகவும் நெருக்கமாக இருந்ததால், ஒரு பகுதி சரிந்தவுடன் அடுத்தடுத்த பகுதிகளும் சரிந்து விழுந்தன.

கடந்த 2023ஆம் ஆண்டு முதல் சூடானில் நிலவி வரும் உள்நாட்டுப் போர், கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, உரிய பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தாத, அங்கீகரிக்கப்படாத சிறிய தங்கச்சுரங்கங்களில் ஆபத்தான முறையில் அந்நாட்டு மக்கள் வேலை செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram