அமெரிக்காவின் நியூயார்க் சாலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு எதிராக உலகின் பல நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் திரும்பியிருக்கின்றன.
குறிப்பாக பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்காத பல நாடுகளும் தற்போது இஸ்ரேலின் செயல்பாடுகளால் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த அங்கீகாரத்துக்குப் பின்னணியில் ஒவ்வொரு நாட்டிலும் இஸ்ரேலுக்கு எதிராக எழுந்த எழுச்சியும் காரணம் என்பது புலப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா சபையில் பொதுச்சபைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், “காசாவில் போர், படுகொலைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது.
பாலஸ்தீன மக்களுக்கு நீதி வழங்குவதற்கும், காசா, மேற்குக் கரை மற்றும் ஜெருசலேமில் பாலஸ்தீன நிலையை அங்கீகரிப்பதற்கும் நேரம் வந்துவிட்டது.
மேலும், போருக்குப் பிறகு காசாவில் ஐ.நா-வின் சர்வதேச நிலைப்பாடுகளுக்கான திட்டங்களையும் வகுக்கப்பட வேண்டும்" என காசாவுக்கு ஆதரவு தெரிவித்து பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துப் பேசினார்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரான்ஸின் துணைத் தூதரகத்துக்குச் செல்ல முற்பட்டார்.
அப்போது, அவரது வாகனம் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டது. சில நிமிடங்களில் காரிலிருந்து இறங்கிய அவர், அங்கு பாதுகாப்பில் இருந்த அமெரிக்க காவல்துறை அதிகாரியிடம் பேசினார்.
அந்த அதிகாரியிடம், துணைத் தூதரகத்துக்குச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதும், அதற்கு அந்தக் காவல்துறை அதிகாரி, "இப்போது வாகன அணிவகுப்பு இருக்கிறது. அதனால் பாதுகாப்பு கருதி இந்தச் சாலையில் அனுமதிக்க முடியாது" என மறுத்திருக்கிறார்.
அப்போதே இமானுவேல் மேக்ரான் அங்கிருக்கும் பேரிகார்ட் மீது சாய்ந்துகொண்டு, யாரையோ தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறார்.
அதில் "எப்படி இருக்கிறீர்கள். நான் எங்கிருக்கிறேன் என யூகியுங்கள், நான் சாலையில் சிக்கியிருக்கிறேன். உங்களுக்காக இந்தச் சாலைகள் முடக்கப்பட்டிருக்கின்றன" எனப் பேசுகிறார்.
சில வினாடி உரையாடலுக்குப் பிறகு, அந்தக் காவல் அதிகாரியிடம், 'இந்த காலியான சாலையைக் கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.
அதன்பிறகு, இமானுவேல் மேக்ரான் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அவர் தன் மெய்க்காவலர்களுடன் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் நடந்து சென்றிருக்கிறார்.
அவர் செல்லும் வழியில் இருந்த பாதசாரிகள் இமானுவேல் மேக்ரானுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அவர்களுக்கெல்லாம் போஸ் கொடுத்துக்கொண்டே சென்றிருக்கிறார். அவர் நடந்து செல்லும் வீடியோவும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கின்றன.