கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதைப் பற்றி அறிய, விஞ்ஞானிகள் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படும் ரோபோக்களை அனுப்பி ஆய்வு நடத்தவுள்ளனர்.
உலகம் வெப்பமயமாவதன் தாக்கத்தால் கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருகின்றன. மனிதர்கள் நேரடியாகச் செல்ல முடியாத கடும் பனிப்பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
'ஜெயின்ட்' என்ற பெயரில் சர்வதேச ஆய்வுத் திட்டத்தை தொடங்கியுள்ளனர். தானாக இயங்கும் டிரோன்கள், நீர்மூழ்கி ரோபோக்கள், தானியங்கி ஆய்வுப் படகுகள், ஏஐ சென்சார்கள் உட்பட்டவை கிரீன்லாந்தின் பனிப்பாறைகள், அவற்றைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் விரிவான ஆய்வை மேற்கொள்ள உள்ளன.
மனிதர்கள் உயிருக்கு ஆபத்தானதாகக் கருதப்படும் பகுதிகளிலும் இந்த ரோபோக்கள் சென்று, பனியின் தடிமன், உருகும் வேகம், கடல் வெப்பநிலை, உப்புத்தன்மை, கடல் நீரோட்டம் போன்ற முக்கிய தகவல்களை தொடர்ந்து சேகரித்து பகுப்பாய்வு செய்யும்.
இதன் மூலம் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகுவதால் உலக அளவில் எந்த அளவுக்கு கடல்மட்டம் உயரும், கடலோர நகரங்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ள அபாயம், அட்லாண்டிக் பெருங்கடலின் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றம் போன்ற தகவல்களைத் துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
இதனால், வரும் காலங்களில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை முன்னரே அறிந்து, அதற்கேற்ப பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பெரும் உதவியாக இந்த ஆய்வு இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.