அமெரிக்க சுதந்திர தினம் 
உலகம்

250 ஆண்டுகள்... அமெரிக்காவில் கோலாகலமாகத் தொடங்கிய சுதந்திர தின விழா!

Staff Writer

அமெரிக்கா இன்று தனது 250-வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் பிரமாண்டமாகக் கொண்டாடி வருகிறது.

அமெரிக்கா 1776-ம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. இன்றுடன் சுதந்திரம் பெற்று 250 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இந்த ஆண்டின் கொண்டாட்டம் வழக்கத்தைவிட மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான பிலடெல்பியாவில் 16 நாள்கள் விழா நடைபெறவுள்ளன.

இசை நிகழ்ச்சிகள், வரலாற்றுக் கண்காட்சிகள், கலாச்சார விழாக்கள், அணிவகுப்புகள், குடும்ப நிகழ்ச்சிகள், வானவேடிக்கை காட்சிகள் உட்பட்ட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறும் முக்கிய விழாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றுகிறார்.

மேலும் ராணுவ அணிவகுப்பு, விமானப்படையின் சிறப்பு வான் சாகசங்கள், தேசிய இசைக்குழுக்களின் நிகழ்ச்சிகள், தேசபக்தி கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

இரவு 40 நிமிடங்கள்வரை நீடிக்கும் மாபெரும் வான வேடிக்கை நிகழ்ச்சிக்காக 8.5 லட்சத்துக்கும் அதிகமான பட்டாசுகள் 10 இடங்களில் இருந்து வெடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.

பல நகரங்களில் கடுமையான வெப்பநிலை நிலவுவதால், குடிநீர் வசதி, மருத்துவ உதவி மையங்கள், கூடுதல் பாதுகாப்புப் படையினர், போக்குவரத்து ஏற்பாடுகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் 250 ஆண்டுகால சுதந்திரப் பயணத்தை நினைவுகூரும் இந்த விழா, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram