வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தை மிக கொடூரமாக ஒடுக்கியதற்காக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, அரசு வேலைகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக 2024 ஜூலை மாதம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டம் பெரிதாகி, பெரும் வன்முறையாக மாறியது. அதன் விளைவாக ஷேக் ஹசீனா ஆட்சியை விட்டும், நாட்டை விட்டும் வெளியேறும் சூழல் ஏற்பட்டது.
இந்தப் போராட்டத்தின் போது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக, வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான சர்வதேச குற்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை, 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐநா சபையின் உரிமைகள் அலுவலக அறிக்கை தெரிவித்திருக்கிறது. மேலும், ஷேக் ஹசீனாவின் இரண்டு உதவியாளர்களான முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமல் மற்றும் முன்னாள் காவல்துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் ஆகியோருக்கு எதிராகவும் இதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையில், இந்த வழக்கை வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தீர்ப்பாயம் விசாரித்து வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரினர்.
இந்த நிலையில், தீர்ப்பாயம் வழங்கியிருக்கும் தீர்ப்பில், “முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அதிகபட்ச தண்டனைக்கு தகுதியானவர். மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் வழங்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் உண்மையானதாகத் தெரிகிறது. ஆதாரமாக வழங்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆடியோக்கள் AI-ஆல் மாற்றப்படவோ, உருவாக்கப்படவோ இல்லை. எனவே, ஷேக் ஹசீனா குற்றவாளி எனக் கண்டறியப்பட்டது.
இந்த வழக்கின் முக்கிய சாட்சியான முன்னாள் காவல்துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அதே நேரம், தூண்டுதல், கொலை செய்ய உத்தரவிடுதல், அட்டூழியங்களைத் தடுக்கத் தவறுதல், குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனை நடவடிக்கை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் ஷேக் ஹசீனா குற்றவாளி என்பது உறுதியாகிறது. எனவே அதன் அடிப்படையில், ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிடப்படுகிறது" என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.