ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று பாகிஸ்தான் திடீர் தாக்குதல் நடத்தியதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லைப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
எல்லையில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் கூறினாலும், அதில் அப்பாவி பொதுமக்கள் தான் உயிரிழப்பதாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு குற்றம்சாட்டி வருகிறது.
அந்தவகையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று பாகிஸ்தான் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூரத் தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் காபூுலில் உள்ள 2000 படுக்கை வசதி கொண்ட ஓமித் மறுவாழ்வு மருத்துவமனை கடுமையாக சேதம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இத்தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் என தாலிபான் அரசு குற்றம்சாட்டும் நிலையில், தீவிரவாத செயல்பாடுகள் நடக்கும் இடங்களையே தாக்கியதாகவும் மருத்துவமனையை தாக்கவில்லை என பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஏற்கெனவே மேற்கு ஆசியாவில் ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதல்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.