ஏஐ அமைச்சர் 
உலகம்

உலகிலேயே முதல் முறையாக ஊழலை ஒழிக்க ஏ.ஐ. அமைச்சர் நியமனம்!

Staff Writer

உலகிலேயே முதல்முறையாக ஊழலை ஒழிக்க ஏ.ஐ. அமைச்சரை நியமித்துள்ளது அல்பேனியா அரசு.

சமீபக்காலமாக செயற்கை நுண்ணறிவின் (ஏ.ஐ.) வளர்ச்சி உச்சத்தை அடைந்திருக்கிறது. சாதாரண மக்களும் எளிதில் அதை பயன்படுத்துகிறார்கள். தங்களது சந்தேகங்களையும், தங்களது கற்பனைகளையும் ஏ.ஐ.யிடமே பகிர்ந்துகொள்கிறார்கள். நாளுக்கு நாள் புது புது ஏஐ செயலிகள் அறிமுகமாகி வருகின்றன.

இந்த நிலையில், உலகிலேயே முதல்முறையாக அல்பேனியா அரசு ஊழலை ஒழிக்க டீயெல்லா (Diella) என்ற ஏஐ அசிஸ்டென்ட்டை நேற்று நியமித்துள்ளது.

அரசு டெண்டர்களில் ஊழல் இல்லாத நிலைமை உருவாக்க பொது கொள்முதல் அமைச்சராக டீயெல்லாவை அல்பேனியா பிரதமர் எடி ராமா நியமித்துள்ளார்.

அல்பேனிய மொழியில் சூரியன் என பொருள்படும் டியெல்லா, அந்நாட்டு மக்களுக்கு அறிமுகமில்லாதது இல்லை. கடந்த ஜனவரி மாதம் முதல், அந்நாட்டு அரசின் இணையதள சேவைகளை வழங்கி வருகிறது. குரல் கட்டளைகள் மூலம் கிட்டத்தட்ட 95% அரசாங்க சேவைகளுக்கு டியெல்லா வழிகாட்டுகிறது.

அரசு அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலேயே நிர்வாகச் சிக்கல்களைச் சமாளிக்க அல்பேனியர்களுக்கு டியெல்லா உதவி வருவது குறிப்பிடத்தக்கது.