உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி, ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் நேற்று முதல் இடத்தை பிடித்தார். ஆனால் சில மணி நேரங்களில் மீண்டும் எலான் மஸ்க் முதலிடத்திற்கு வந்தார்.
உலகின் பணக்காரர்கள் பட்டியலை புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான நம்பர் ஒன் பணக்காரர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
அதில், 385 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருந்த எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கை, ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் பின்னுக்குத் தள்ளினார். இவரது சொத்து மதிப்பு 393 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
இதனால் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை எல்லிசன் பிடித்தார்.
இப்படி சில மணி நேரங்கள் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக எல்லிசன் இருந்த நிலையில், மீண்டும் காட்சிகள் மாறின. எலான் மஸ்க் நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயரத் தொடங்கியது. இதனால் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு வித்தியாசத்தில் மீண்டும் எலான் மஸ்க் இன்று காலை முதலிடத்திற்கு வந்தார்.
இந்த இருவர் இடையிலான நம்பர் ஒன் பணக்காரர் இடத்தை கைப்பற்றும் போட்டி, அமெரிக்க தொழில் வர்த்தகத் துறையினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 97.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளுடன் 18வது இடத்திலும், கவுதம் அதானி 80.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளுடன் 21வது இடத்திலும் உள்ளனர்.